கூலாய் பகுதியில் காற்றின் தரம் வழக்கநிலையில் உள்ளது: மாநகராட்சி

இதுவரை ஏழு பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன

கூலாய் பகுதியில் காற்றின் தரம் வழக்கநிலையில் உள்ளது: மாநகராட்சி

2 mins read
கூலாயின் ரப்பர் கிடங்குப் பகுதியில் காற்று வழக்கநிலையில் உள்ளது
c792263c-4cc7-42f3-987f-a11911554bd6
ஜோகூர் மாநிலத்தில் கூலாய் பகுதியில் உள்ள நெகிழி (பிளாஸ்டிக்), ரப்பர் கிடங்கில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நடந்த தீ சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் காற்று மாசின் அளவு வழக்க நிலையில் இருந்தது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கூலாய்: கூலாயின் செங்காங் வட்டாரத்தில் உள்ள பிளாஸ்டிக், ரப்பர் கிடங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) பகல் 4.37 மணிக்குத் தொடங்கிய தீச் சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதியில் காற்றின் தரம் வழக்கநிலையில் உள்ளதாக ஜோகூர் மாநில சுற்றுப்புறத் துறை தெரிவித்துள்ளது.

ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுப்புறத் துறையின் தலைவருமான லிங் டியன் சூன் காற்றின் தரத்தை தமது துறை கண்காணித்து வருவதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு கண்காணிப்புக் கருவிகள் எஸ்ஜெகெசி செங்காங் (SJKC Sengkang), எஸ்ஜெகெசி கூலாய் (SJKC Kulai) ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமான காற்றுத் தரநிலையைக் கருவிகள் காட்டினாலும் தீயை முழுவதுமாக அணைக்கும் முயற்சிகள் நடந்துவருவதால், நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்று அந்த அறிக்கையில் திரு லிங் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளி மாணவர்களுக்குத் தலைவலி, இருமல், கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக கூலாய் சுகாதார அலுவலகத்தில் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

தற்போது 56 மாணவர்கள் எஸ்கே தாமான் கோத்தா கூலாய் பள்ளியில் அத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று எஸ்கே தாமான் கோத்தா கூலாய் 2 பள்ளியில் 24 மாணவர்களுக்கும் அதே அறிகுறிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

“பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாரும் மருத்துவமனையில் தங்கவைக்கப்படவில்லை,” என்று திரு லிங் உறுதிசெய்தார்.

தொடர் தலைவலி, இருமல் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் உள்ளோர் உடனடியான மருத்துவ உதவியை நாடும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்புத் துறை துணை அமைச்சருமான டியோ நீ சிங், இதுவரை தற்காலிகமாக ஏழு பள்ளிகள் கல்வி அலுவலகத்தால் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து வகுப்புகளும் இணையம் வழியாக இல்லங்களில் நடப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்த கிடங்கில் வியாழக்கிழமை காலை 10 மணிக்குள்ளாக 90 விழுக்காட்டுத் தீ அணைக்கப்பட்டுவிட்டது என்று மாநில தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது. ஆயினும் கிடங்கில் கரும்புகை தொடர்ந்து கிளம்புவது காணப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருதீவிபத்துகாற்றுத்தரம்மாசுபாடுபள்ளி