சிட்னி: விமான நிலையக் கண்காணிப்புக் கோபுரங்களில் பணியாற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு விமானங்களில் பயண நேரங்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) தாமதமாகின.
விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய கூட்டரசின் அமைப்பு அதன் விவரங்களை அன்றையதினம் வெளியிட்டது.
‘ஏர்சர்வீசஸ் ஆஸ்திரேலியா’ எனப்படும் அமைப்பில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்தை அதன் தேவைக்கேற்ற வகையில் பாதுகாப்பாக நிர்வகிக்க முறையான செயல்முறைகளை அமலாக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தது.
அதன்படி சிட்னி வந்துசேரவேண்டிய 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு ஒரு மணிநேரத்துக்கும் மேற்பட்டு பல சேவைகள் தாமதமாக செயல்படவுள்ளன.
ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமான சிட்னி விமான நிலையம் ஊழியர் பற்றாக்குறையால் அண்மையில் சில விமான விபத்துகளில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளது. அந்தச் சம்பவங்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.
“வியாழக்கிழமை இரவு எதிர்பாராத விதமாக விமானக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் பணிக்கு வரவில்லை. அதிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை,” என்று ஏர்சர்வீசஸ் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை நிர்வாகி பீட்டர் குரன் அரசாங்க செனட் குழு அமைத்துள்ள விமானப் போக்குவரத்து ஆய்வுக் குழுவிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

