ஹாங்காங்/கோலாலம்பூர்: மலேசியாவின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர்ஏஷியா, இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் அந்நாட்டில் பணியாற்றும் அதன் ஊழியர்களின் ஊதியத்தை ஒவ்வொரு மாதக் கடைசித் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.
அதன் விவரங்கள் ஊழியர்களுக்கு நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் அறிவிக்கப்பட்டதாக அதனைப் பார்வையிட்ட ராய்ட்டர்ஸ் ஊடகம் உறுதிப்படுத்தியது.
பிலிப்பீன்சில் உள்ள கிளையில் அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் விளைவால் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிகிறது. மலேசிய ஊழியர்களுக்குக் கடந்த வாரம் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் நிறுவனத்தின் செயல்பாட்டு நடைமுறைகளில் செய்யப்படும் ‘தற்காலிக மாற்றங்களால்’ அந்த ஏற்பாடு அவசியமாகிறது என்று விளக்கப்பட்டது.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய மலிவு விமானச் சேவை நிறுவனமாகிய ஏர்ஏஷியா, மற்ற விமான நிறுவனங்களைப் போலவே எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி முகம்மது குர்ரம் சியா குறிப்பிட்டார்.
இந்த ஐந்து மாத காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் 30ஆம் தேதியன்றோ அல்லது பிப்ரவரி மாதக் கடைசி நாளிலோ ஊழியர்களின் ஊதியம் வழங்கப்படும்.
