நிதி ஆதரவுக்காக ஏர்ஏ‌ஷியா - மலேசிய அரசாங்கம் பேச்சுவார்த்தை: தகவல்

நிதி ஆதரவுக்காக ஏர்ஏ‌ஷியா - மலேசிய அரசாங்கம் பேச்சுவார்த்தை: தகவல்

படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 1:25 pm

2 mins read

கோலாலம்பூர்: ஏர்ஏ‌ஷியாவைத் தொடங்கியவர்களில் ஒருவரான டோனி ஃபெர்னாண்டஸ், அந்நிறுவனத்துக்கு அரசாங்கம் நிதி ஆதரவு வழங்குவது குறித்து இரு வாரங்களுக்கு முன்பு மலேசிய நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் தெரிந்த மூவர் கூறியுள்ளனர்.

இது, தென்கிழக்காசியாவின் ஆகப்பெரிய மலிவுக் கட்டண விமானச் சேவையான ஏர்ஏ‌ஷியாவின் நிதி நிலைமை குறித்து தொடரும் கவலையை எடுத்துக்காட்டுவதாகத் தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். விமானங்களுக்கான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது இதற்குக் காரணம்.

‘நிபந்தனைகள்’

முன்வைக்கப்படும் நிபந்தனைகளுக்கு ஏர்ஏ‌ஷியா ஒப்புக்கொண்டால் அரசாங்கம் அந்நிறுவனத்தின் நிதி திரட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகத் தகவல் தெரிந்த மூவரில் இருவர் தெரிவித்தனர். அந்த நிபந்தனைகள் குறித்து கலந்து பேசப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வாரத்தில் தாம் மலேசியாவின் நிதி, போக்குவரத்து அமைச்சுகளைச் சேர்ந்த அதிகாரிகளைச் சந்தித்ததாக திரு பெர்னாண்டஸ், ஏர்ஏ‌ஷியாவின் துணை நிறுவனர், ஆலோசகர் ஆகிய பொறுப்புகளை வகிப்பவர் என்ற முறையில் அந்நிறுவனத்தைப் பிரதிநிதித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். ராய்ட்டர்சுடன் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) நடந்த சிறப்பு நேர்காணலில் அவர் பேசினார்.

டோனி ஃபேர்னாண்டஸ் கூறியது

அந்தப் பேச்சுவார்த்தை, விமான நிலையக் கட்டணங்கள், எரிபொருள் போன்ற விமானத்துறைச் செலவு சார்ந்தது என்றும் அது நிதி ஆதரவு தொடர்புடையது அல்ல என்றும் திரு ஃபெர்னாண்டஸ் சொன்னார்.

“உலகில் உள்ள எல்லா விமான நிறுவனங்களையும் போல் இது சவாலான காலம் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறிவருகிறோம்,” என்றார் அவர்.

“நிதி ஆதரவு குறித்து அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார். “நான் அரசாங்க அதிகாரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டு. அவர்களைச் சந்திக்கிறேன் என்றால் நிதி ஆதரவைப் பற்றிதான் பேசுகிறோம் என்று அர்த்தமாகாது,” என்றும் அவர் விவரித்தார்.

கொவிட்-19 காலத்தில் இடம்பெற்றதைப் போல், அரசாங்க ஆதரவின்றி தற்போதைய நிலையை ஏர்ஏ‌ஷியாவால் சமாளிக்க முடியும் என்று தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக திரு ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார். அதேவேளை மலேசியா உட்பட, ஏர்ஏ‌ஷியா செயல்படும் நாடுகளில் அரசாங்கம் உதவி வழங்கினால் அந்நிறுவனம் அதை மறுக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஉலகம்நிதி திரட்டுஆதரவுநிதிஅரசாங்கம்நிபந்தனை