மான்ட்ரியல்: புதிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்குவதற்குத் தயாராகி வருவதாக ஏர்ஏஷியா எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அடுத்த ஓரிரு மாதங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.
எரிபொருள் விலையேற்றத்தால் விமானப் போக்குவரத்துத் துறை தடுமாறி வந்தாலும் புதிய நிறுவனம் எதிர்காலத்தில் மிகுந்த பலன் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“நெருக்கடி காலத்திலும் வாய்ப்புகள் உள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் சூழல் நீண்ட காலத்திற்கு நீடிக்காது,” என்றார் அவர்.
கனடாவிடமிருந்து 150 ஏர்பஸ் எஸ்இ ஏ220 விமானங்களை வாங்குவதற்கான பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த விரிவாக்க நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
சிறிய, வேகமான விமானங்களைப் பயன்படுத்தி ஆசியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் தொழிலை விரிவுபடுத்த 62 வயதான திரு ஃபெர்னாண்டஸ் திட்டமிட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி தெரிவித்தது.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக முன்கூட்டியே காப்பீடு செய்யும் இடர்காப்பு வணிக (Hedging) முறையைத் தவிர்ப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இதனால், ஏர்ஏஷியா பங்கு விலை கிட்டத்தட்ட 35 விழுக்காடு சரிந்தபோதும், நீண்டகால அடிப்படையில் இடர்காப்பு வணிகம் பயன் தராது என்பதும் எண்ணெய் விலை குறையும் என்பதும் திரு ஃபெர்னாண்டசின் கணிப்பு.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, வியட்னாமில் தனது தொழிலை விரிவுபடுத்துவது குறித்து ஏர்ஏஷியா ஆலோசித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. அத்துடன், பஹ்ரேனிலிருந்தும் விமானங்களை இயக்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

