கோலாலம்பூர்/ஹாங்காங்: ஏர்ஏஷியாவின் உள்நாட்டு விற்பனைப் பங்கைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று மலேசியா ஏர்லைன்ஸ், பாட்டிக் ஏர் விமான நிறுவனங்களிடம் மலேசிய அரசாங்கம் கேட்டுள்ளதாக, அது பற்றிய தகவல்கள் அறிந்த இருவர் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியாவின் நிதிநிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஏர்ஏஷியா சந்திக்கும் நிதி நெருக்கடிகள் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கும் மலேசியா ஏர்லைன்ஸ், பாட்டிக் ஏர் விமான நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அண்மை வாரங்களில் அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறினர்.
அமெரிக்க - இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட விமான எரிபொருள் விலை உயர்வால் ஏர்ஏஷியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.
இரண்டாம் காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது எரிபொருள் விலை 66 விழுக்காடு உயர்ந்து, பீப்பாய்க்குச் சராசரியாக 183 அமெரிக்க டாலராக அதிகரித்தது.
நிதி அமைச்சும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹட் நிறுவனமும் ஈடுபட்டுள்ள அந்தப் பேச்சுவார்த்தைகள், ஏர்ஏஷியாவின் நிதி நெருக்கடிகள் தொடர்பான விரிவான திட்டமிடலின் ஓர் அங்கமாக அமைந்துள்ளதாகத் தகவல் அறிந்தவர்கள் கூறினர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய மூலதனத்தைத் திரட்டுவதற்கான விமான நிறுவனத்தின் திட்டத்தை வலுப்படுத்த அரசாங்கம் வழங்கக்கூடிய ஆதரவு, கலந்தாலோசிக்கப்பட்ட மற்ற தெரிவுகளில் அடங்கும். ஆனால், எத்தகைய அளவில் ஆதரவு வழங்கப்படும் என்ற துல்லியமான விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை என்று ராய்ட்டர்ஸ் செப்டம்பரில் அறிவித்தது.
ஏர்ஏஷியாவின் நிதிநிலை குறித்த எந்த விவரங்களையும் சுயேச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
இந்நிலையில், ஏர்ஏஷியாவின் விமானக் குத்தகைளைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் மட்டுமே, அதன் செயல்பாட்டைப் பெருமளவில் தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்று மலேசியா ஏர்லைன்ஸ், பாட்டிக் ஏர் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கூறியதாக, தகவல் அறிந்த இருவரில் ஒருவர் கூறினார்.
விமானங்கள் இல்லாமல் அதன் வழித்தடங்களையும் பயணிகளின் எண்ணிக்கையையும் ஏற்றுக்கொள்வது மிகச் சிரமமாக இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.
