கூச்சிங்: சரவாக் மாநிலத்திற்குச் சொந்தமான ஏர்போர்னியோ விமான நிறுவனம், அதன் சிறகுகளை மேலும் விரித்துப் பறக்கவிருக்கிறது.
அதன் தொடக்கமாக திங்கட்கிழமை (ஜூலை 20) பிற்பகல் ஒரு மணியளவில் கூச்சிங்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கி அது பறந்தது. அந்தப் பயணிகள் விமானத்தில் சரவாக்கின் முதல்வர் அபாங் ஜோஹாரியும் பயணம் செய்தார்.
மாஸ்விங்ஸ் விமான நிறுவனத்துக்குப் பதிலாக ஏர்போர்னியோவை முழுமையாகச் செயல்படுத்த விரும்புகிறோம் என்றார் திரு அபாங் ஜோஹாரி.
“எங்கள் நோக்கம் மிக எளிதானது. சரவாக்கின் ஆகாயத் தொடர்புகளையும் சுற்றுலாவையும் மேம்படுத்தி பொருளியல் வளர்ச்சியைப் பெருக்க விரும்புகிறோம்.
“ஏர்போர்னியோ, சரவாக்கிற்குள்ளும் சாபா, லபுவானிலிருந்து தீபகற்ப மலேசியாவுக்கும் அனைத்துலகப் பாதைகளுக்கும் சேவைகளை விரிவுபடுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.
கூச்சிங் - கோலாலம்பூர் பாதையில் விமானக்கட்டணத்தை, குறிப்பாக பள்ளி விடுமுறை, பண்டிகைக் காலங்களில் நிலைப்படுத்துவது தங்களது மற்றொரு நோக்கம் என்றார் அவர்.
“எங்களுடைய விமானக் கட்டணமான 375 ரிங்கிட்டை அறிவித்ததும் மற்ற விமான நிறுவனங்கள் விலையைக் குறைக்க வேண்டியிருந்தது. இதனால் சரவாக் மக்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பாதை வழியாகப் பயணம் செய்யும் அனைத்து மலேசியர்களும் பயனடைவார்கள்,” என்றும் அவர் கூறினார்.
ஏர்போர்னியோ விமான நிறுவனத்தின் தலைவரான முஹமட் அபு பக்கர் மர்சுகி, இந்தத் தொடக்க விமானச் சேவை, இரு போயிங் 737-800 ரக விமானங்களை குத்தகைக்கு எடுத்து வணிகரீதியிலான நடவடிக்கையில் ஏர்போர்னியோ நுழைவதைக் காட்டுகிறது என்றார்.
“கூச்சிங்கிலிருந்து கோலாலம்பூருக்கு நாள்தோறும் இரண்டு விமானச் சேவைகள் வழங்கப்படுவதால் ஏர்போர்னியோ தென்சீனக் கடல் பகுதியில் ஒரு முக்கிய வணிக இணைப்பை ஏற்படுத்தும்.
“இது, சரவாக் - தீபகற்ப மலேசியா இடையிலான தொடர்பை வலுப்படுத்தும்,” என்றார் அவர்.

