விமான நிறுவனங்களின் லாபம் இவ்வாண்டு பாதியாகக் குறையும் என கணிப்பு

விமான நிறுவனங்களின் லாபம் இவ்வாண்டு பாதியாகக் குறையும் என கணிப்பு

2 mins read
00c0c4c2-a0fb-419c-99c5-31e9b322e814
விமான நிறுவனங்கள் கடந்த ஆண்டு US$45 பில்லியன் லாபம் ஈட்டிய நிலையில் இவ்வாண்டு அது US$23 பில்லியனாகக் குறையும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரியோ டி ஜெனிரோ: மத்திய கிழக்குப் போர் காரணமாக 70 விழுக்காடு வரை விமான எரிபொருள் விலை ஏறிவிட்டதால் இவ்வாண்டில் விமான நிறுவனங்களின் லாபம் கிட்டத்தட்ட பாதியாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு விமான நிறுவனங்களின் நிகர லாபம் US$45 பில்லியன் (S$58.1 பில்லியன்) எனப் பதிவான நிலையில், இவ்வாண்டு அது US$23 பில்லியனாகக் குறையும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் (ஐஏடிஏ) முன்னுரைத்துள்ளது.

விமான எரிபொருள் விலை வேகமாக ஏற்றம் கண்டதால் எல்லா விமான நிறுவனங்களின் லாபமும் பாதிக்கப்படும் என்று சங்கத்தின் தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ் கூறியுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தின் இரண்டாம் நாளில் உரையாற்றிய அவர், இவ்வாண்டின் நடுப்பகுதியில் நிலவும் விமானத் தொழில் நிலவரத்தின் அடிப்படையில் தமது கணிப்பை வெளியிட்டார்.

“உலகின் எல்லா விமான நிறுவனங்களுக்குமே இது ஒரு சோதனையான ஆண்டு. குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றுப் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத விமான நிறுவனங்களுக்கு இது மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும்.

“எரிபொருள் விலை உயர்வைச் சரிக்கட்ட விமானப் போக்குவரத்துக் கட்டணங்களை ஏற்றி, செயல்திறனை மேம்படுத்தினாலும் செலவின் ஒரு பகுதியை மட்டுமே மீட்க முடியும். தவிர, கடந்த ஆண்டின் லாபத்தை நெருங்குவதற்கு அவை போதாது,” என்றார் அவர்.

ஆசிய-பசிபிக் வட்டார விமான நிறுவனங்களின் நிகர லாபம் கடந்த ஆண்டு US$9.8 பில்லியன் என மதிப்பிடப்பட்ட வேளையில் இவ்வாண்டு அது US$6.6 பில்லியனாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்