வாஷிங்டன்: உலகையே எரிபொருள் இல்லாமல் வலம்வந்த சோதனை விமானம் ஒன்று, அண்மையில் மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியுள்ளது. ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்று அழைக்கப்படும் சோதனை விமானம், ஒரு துளியளவு எரிபொருளைக்கூட பயன்படுத்தவில்லை.
நான்கு கண்டங்கள், இரண்டு பெருங்கடல்கள், மூன்று கடல்கள் என 23 நாள்களுக்கு 17 கட்டங்களாக 43,000 கிலோமீட்டர் தூரத்தை 2016ஆம் ஆண்டு வெற்றிகரமாகக் கடந்தது ‘சோலார் இம்பல்ஸ் 2’.
பெர்டிரான்ட் பிக்கார்ட், ஆண்டிரே போர்ஷ்பெர்க் ஆகிய இரண்டு சுவிட்சர்லாந்து விமானிகள் ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானத்தை இயக்கினர். சூரிய சக்தியை மட்டும் கொண்டு உலகத்தைச் சுற்றிவந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ மூவாண்டுக்குப் பின்னர் ஸ்கைடுவெல்லர் ஏரோ விமான நிறுவனத்திடம் விற்கப்பட்டது.
ஓடுபாதையைப் பயன்படுத்த முடியாத நெருக்கடியான சூழலின்போது தண்ணீரில் தரையிறங்கக்கூடிய ஆற்றல்கொண்ட ஆளில்லா வானூர்தியாக ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானத்தை ஸ்கைடுவெல்லர் ஏரோ உருமாற்றியது.
கடந்த மாதம் 26ஆம் தேதி மிஸ்ஸிஸிப்பியில் உள்ள ஸ்டென்னிசிலிருந்து புறப்பட்ட ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம், இம்மாதம் 4ஆம் தேதி மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.
“சாதனை அளவாக 8 நாள்கள், 14 நிமிடங்களுக்குச் சூரிய சக்தியால் மட்டுமே இயங்கிய ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம், சூரிய சக்தியின் மூலம் விமானங்கள் தொடர்ச்சியாகப் பறக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது,” என்று ஸ்கைடுவெல்லர் ஏரோ குறிப்பிட்டது.
‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் விசாரிக்கிறது.


