ஆண்டிறுதிக்குள் நுசாந்தரா விமான நிலையம் பயணிகள் விமானங்களுக்குத் திறக்கப்படும்

2 mins read
d38a2acf-af58-4d55-b98f-5a0a857a23c7
நுசாந்தரா விமான நிலையத்தைச் சென்றடைந்த இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (இடமிருந்து இரண்டாவது). - படம்: இந்தோனீசிய அதிபர் அலவலகம் / யூடியூப்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய தலைநகராக அமைக்கப்பட்டுவரும் நுசாந்தராவின் விமான நிலையம், இவ்வாண்டிறுதிக்குள் திறக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ அறிவித்துள்ளார்.

அந்த விமான நிலையத்தை மிக முக்கியமான நபர்களுக்கென (VVIP) திறந்துவிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பெருஞ்செல்வந்தர்கள், உயரிய அரசியல் பதவி வகிப்போர் உள்ளிட்டோர் அத்தகையோரில் அடங்குவர்.

“நுசாந்தரா விமான நிலையத்தைப் பயணிகள் விமான நிலையமாக மாற்ற நான் போக்குவரத்து அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று திரு ஜோக்கோவி செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 24) முதன்முறையாக நுசாந்தரா விமான நிலையத்தைச் சென்றடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

இவ்வாண்டு இறுதியில் திறக்கப்படும்போது நுசாந்தரா விமான நிலையத்தில் 200,000 பயணிகள் வரை கையாள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால அடிப்படையில் ஆண்டுதோறும் ஏழு மில்லியன் பயணிகளைக் கையாள்வது இலக்கு என்றார் திரு ஜோக்கோவி.

வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதியன்று திரு ஜோக்கோவி, அதிபர் பொறுப்பை திரு பிரபோவோ சுபியாந்தோவிடம் ஒப்படைப்பார். அதுவரை திரு ஜோக்கோவி, நுசாந்தராவில் இருந்தபடி தமது பணிகளை மேற்கொள்வார்.

விமான நிலையத்தின் பணிகள் மாறுவது, நுசாந்தரா வட்டாரத்தில் வசிப்போருக்குப் பலனளிக்கும் என்று திரு ஜோக்கோவி குறிப்பிட்டார். குறிப்பாக ஹஜ்ஜுப் பயணம் உள்ளிட்ட புனிதப் பயணங்களை மேற்கொள்ள நுசாந்தரா விமான நிலையம், அப்பகுதிவாசிகளுக்குக் கைகொடுக்கும் என்றார் அவர்.

இந்தோனீசியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய விமான நிலையத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படச் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி, இந்தோனீசியாவின் தேசிய தினமாகும். ஆனால், கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

நுசாந்தரா விமான நிலையம், 4.3 டிரில்லியன் ருப்பியா (334 மில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்பட்டுள்ளது. அதன் விமான ஓடுபாதை மூன்று கிலோமீட்டர் நீளமும் 45 மீட்டம் அகலமும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.

அந்த ஓடுபாதையின் பரப்பளவு, அனைத்துலகப் பயணங்களுக்கெனப் பயன்படுத்தப்படும் பெரிய விமானங்கள் செல்லப் போதுமானதாகும்.

குறிப்புச் சொற்கள்