சோல்: இவ்வாண்டின் முதற்பாதியில் ஆக அதிக எண்ணிக்கையில் அனைத்துலகப் பயணிகள் பயன்படுத்திய விமான நிலையமாகத் தென்கொரியாவின் இஞ்சியோன் விமான நிலையம் விளங்குகிறது என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளிவந்த தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
லண்டனின் ஹீத்ரோ, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையங்களைப் பின்னுக்குத் தள்ளி, தென்கொரியத் தலைநகரில் இயங்கும்இஞ்சியோன், மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
திறக்கப்பட்டு 25 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் மிகக் குறுகிய காலத்தில் இந்த விமான நிலையம் முதலிடத்தை எட்டியுள்ளது
கடந்த ஆறு மாதங்களில் 38.39 மில்லியன் பயணிகளை அந்த விமான நிலையம் கையாண்டதாக அனைத்துலக விமான நிலைய மன்றம் 1,234 விமான நிலையங்களில் சேகரித்துள்ள ஆரம்பக்கட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இஞ்சியோன் விமான நிலையத்தின் வளர்ச்சி படிப்படியாக நிகழ்ந்துள்ளது. 2002ஆம் ஆண்டில் 10ஆம் இடம், 2018ல் ஐந்தாம் இடம், 2024ல் மூன்றாம் நிலை என அதன் வளர்ச்சி சீராக இடம்பெற்றுள்ளது.
தரவரிசையில் பிரிட்டன் தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் 37.79 மில்லியன் பயணிகள் வருகையுடன் இரண்டாம் நிலையில் உள்ளது.
மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்கு 34.53 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
பல ஆண்டுகளாக முதலிடத்துக்குப் போட்டியிட்ட துபாய் அனைத்துலக விமான நிலையம், முன்னிலையில் உள்ள ஐந்து இடங்களில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


