சோல்: தென்கொரிய விமான நிலைய ஊழியர்கள், புதன்கிழமை (அக்டோபர் 1) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ‘கொரியா ஏர்போர்ட்ஸ் கார்ப்பரேஷன்’ தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் 15 விமான நிலையங்களில் வேலைசெய்யும் தொழிற்சங்கவாதிகள் 2,300 பேர், சம்பள உயர்வு, கூடுதல் ஓய்வு நாள்கள், பாதுகாப்பான வேலைச் சூழல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்கின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களில் ஒன்றான கொரியப் பொதுச் சேவை, போக்குவரத்து ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.
நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும்வரை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்வர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.
தென்கொரியர்கள் பலரும் அக்டோபர் முதல் வாரத்தில் ‘சுசியோக்’ எனப்படும் தேசிய விடுமுறையை ஒட்டி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், விமான நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அந்த ஊழியர்கள் பெரும்பாலும் துப்புரவு, வாகன நிறுத்துமிட நிர்வாகம் போன்ற வேலைகளைச் செய்பவர்கள் என்று தொழிற்சங்கமும் ‘கொரியா ஏர்போர்ட்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனமும் கூறின.
விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்துகொள்ளவில்லை. அதனால் விமானச் சேவைகளுக்குக் குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.