உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கியின் இயக்குநர் அவை அஜய் பங்காவை புதிய தலைவராக புதன்கிழமை (மே 3) அறிவித்தது.
ஜூன் 2ஆம் தேதி பொறுப்பேற்கும் 63 வயது அஜய் பங்கா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வங்கியின் தலைவராக இருப்பார்.
இந்தியாவில் சீக்கிய குடும்பத்தில் பிறந்த அஜய் பங்கா, மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இருந்துள்ளார்.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மால்பாஸின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு வரை இருந்த நிலையில், அவர் அதற்கு முன்னதாகவே பதவி விலகுவதாக அறிவித்தார். அதனால் வரும் ஜூன் 1ஆம் தேதியுடன் மால்பாஸின் பதவிக்காலம் முடிகிறது.
வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அஜய் பங்காவை பரிந்துரை செய்தார்.
தலைவர் பதவிக்கு அஜய் பங்கா மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக யாரும் உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை.
இதனால் உலக வங்கி தலைவராகஅவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.