துபாய்: கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டுள்ள நடிகர் அஜித் குமார், துபாயில் நடந்த கார் பந்தயப் பயிற்சியின்போது விபத்தில் சிக்கினார்.
எதிர்வரும் கார் பந்தயப் போட்டிக்குத் தயாராகும் விதமாக பந்தயத் தடத்தில் அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காயம் எதுவுமின்றி அவர் காரிலிருந்து வெளியேறுவது தெரிந்தது.
இச்செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அஜித் ரசிகர்கள், அவரின் பாதுகாப்பாக இருந்தது பற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். திரைத்துறையில் பரபரப்பான வேலைக்கு மத்தியிலும் கார் பந்தயத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவரும் அஜித், பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
துபாய் பயணத்துக்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் தம் குடும்பத்துக்கு உணர்வுபூர்வப் பிரியாவிடையை அஜித் தந்தார். அண்மையில் புத்தாண்டை முன்னிட்டு, தம் குடும்பத்துடன் அஜித் சிங்கப்பூர் வந்திருந்தார்.
கார் பந்தயத்துக்குத் திரும்பியுள்ள அஜித், பிரசித்திபெற்ற ‘மிஷெலின் 24எச் சீரிஸ்’ போட்டியில் பங்கேற்கிறார். ஜனவரி 12, 13ஆம் தேதிகளில் அது நடைபெறுகிறது.