இரட்டைக் கருப்பை! இரு நாள்களில் இரண்டு குழந்தைகள்!

1 mins read
121f0b07-7345-4f47-a841-10568059c8e0
தாம் ஈன்றெடுத்த இரு பிள்ளைகளுடன் கெஸ்லி ஹேட்சர், 32. - படம்: ஆண்ட்ரியா மேப்ரி / அலபாமா பல்கலைக்கழகம்

இரண்டு கருப்பைகளைக் கொண்டுள்ள அமெரிக்கப் பெண் ஒருவர், அடுத்தடுத்த நாள்களில் இரு குழந்தைகளை ஈன்றெடுத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கருத்தரிக்கும் மில்லியன் பேரில் ஒருவருக்கே இப்படி நிகழும் எனக் கூறப்படுகிறது.

கெஸ்லி ஹேட்சர், 32, என்ற அப்பெண் மொத்தம் 20 மணி நேரம் மகப்பேற்று வலியில் இருந்தார்.

பர்மிங்ஹமில் உள்ள அலபாமா பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் பிள்ளையையும் அதற்கு மறுநாள் இன்னொரு பிள்ளையையும் கெஸ்லி பெற்றெடுத்தார்.

இரண்டுமே பெண் குழந்தைகள்தான் என்று ‘பிபிசி’ செய்தி தெரிவித்தது.

கெஸ்லி ஏற்கெனவே மூன்று பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கிறார்.

இம்முறையும் ஒரு கருப்பையில்தான் பிள்ளை இருக்கும் என நினைத்திருந்த இவர், மருத்துவப் பரிசோதனையில் இரண்டு கருப்பைகளிலும் கருவுற்றிருப்பதை அறிந்ததும் தன்னாலேயே நம்ப முடியவில்லை என்றார்.

இந்த அனுபவத்தை கெஸ்லி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

டிசம்பர் 19ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் தமது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது மறுநாள் காலை 6.10 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையை அவர் ஈன்றார்.

குறிப்புச் சொற்கள்