அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் மூன்று காற்றழுத்தச் செயலிழப்பு எச்சரிக்கைகள்

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் மூன்று காற்றழுத்தச் செயலிழப்பு எச்சரிக்கைகள்

1 mins read
c96a3149-b3c8-43ff-98bc-8436f4f7688e
விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததால் அது அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தது.  - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஜனவரி 5ஆம் தேதி அவசரமாகத் தரையிறங்கிய போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் முன்னதாக மேற்கொண்ட மூன்று பயணங்களின்போது அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் காற்றழுத்த எச்சரிக்கை விளக்குகள் குறித்து புகார் செய்திருந்தனர்.

விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததால் அது அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தது.

டிசம்பர் 7, ஜனவரி 3, ஜனவரி 4ஆம் தேதிகளில் காற்றழுத்தச் செயலிழப்பை உணர்த்தும் எச்சரிக்கை விளக்குகள் எரிந்ததாக தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் தலைவர் ஜென்னிஃபர் ஹொமெண்டி கூறினார்.

இருப்பினும், அந்தச் சம்பவங்களுக்கும் ஆக அண்மைய சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.

அந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு அந்த விமானம் நீருக்கு மேல் ஹவாயிக்கு நீண்ட பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது என்ற முடிவை அலாஸ்கா ஏர்லைன்ஸ் எடுத்தது. அப்போதுதான் தேவைப்பட்டால் அது உடனடியாக ஒரு விமான நிலையத்திற்குத் திரும்ப முடியும் என்று திருவாட்டி ஹொமெண்டி கூறினார்.

இந்நிலையில், காணாமல்போன விமானக் கதவு ஜனவரி 7ஆம் தேதியன்று வீட்டு உரிமையாளர் ஒருவரின் கொல்லைப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டதாக வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்