வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் அண்மைய சர்ச்சையில் சம்பந்தப்பட்டுள்ள சீனப் பெண்ணான ஆலிஸ் ஹுவாங், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்குடனான தமது உறவின்போது, ஓராண்டுக்கும் மேலாகச் சீனாவின் முன்னணி உளவு அமைப்பின் அதிகாரி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் சந்திப்புகளை விவரிக்கும் உளவுத்துறை அறிக்கைகளை அறிந்த நபர்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில், 2025 வசந்தகாலம் முதல் இந்த ஆண்டின் இலையுதிர் காலம் வரை சீனாவின் அரசுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவருடன் ஆலிஸ் ஹுவாங் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
என்விடியா, ஜென்சன் ஹுவாங், வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர்கள் கருத்துக் கோரியதற்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. கருத்துக் கேட்பதற்காக ஆலிஸ் ஹுவாங்கை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் தொடர்புகொள்ள முடியவில்லை.
என்விடியாவின் முக்கிய வாடிக்கையாளராகவும் ஒரு காலத்தில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான என்விடியா சில்லுகளின் விற்பனைக்குக் காரணமாகவும் இருந்த சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ‘மெகாஸ்பீட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தை ஆலிஸ் ஹுவாங் முன்னர் வழிநடத்தினார்.
என்விடியாவின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளை மெகாஸ்பீட் நிறுவனம் சீனாவிற்குக் கடத்தியதாக எழுந்த சந்தேகங்களின் பேரில், 2024ஆம் ஆண்டுமுதல் அமெரிக்க அதிகாரிகள் அந்நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலிஸ் ஹுவாங் ஓர் உளவாளி என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட கருத்துகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
