கோலாலம்பூர்: இந்த ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயாவில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவுக்கு அமைச்சர் ஃபாமி தலைமை தாங்குகிறார்.
“தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தற்போதைய நிலைப்பாடு இதுவே,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“வெள்ளிக்கிழமை நிலவரப்படியும் சனிக்கிழமை காலையில் உள்ளதுபோலவும் நிலைமை தொடர்ந்தால், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) நிகழ்ச்சி திட்டமிட்டதுபோல் நடக்கும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“புகைமூட்டம் தொடர்பான நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதேபோல் செயற்கை மழை சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும்,”என்று திரு ஃபாமி கூறினார்.
பள்ளி விடுமுறை, சிறப்பான போக்குவரத்து வசதிகளால் இந்த ஆண்டு 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தேசிய தினக் கொண்டாட்டத்திற்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு, 24 மணி நேர எம்ஆர்டி ரயில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு வரும் பார்வையாளர்கள், புகைமூட்டப் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்95 முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பங்கேற்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு என்95 முகக்கவசங்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
“பங்கேற்பாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் அணியலாம். நாங்கள் அதைக் கட்டாயமாக்கவில்லை. அது தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்தது,” என்று அமைச்சர் ஃபாமி கூறினார்.
சரவாக் நிலவரம்
சனிக்கிழமை நண்பகல் நிலவரப்படி சரவாக்கில் உள்ள நான்கு இடங்களில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டது.
லுபோக் அந்து, லுண்டு, ஸ்ரீ அமான் ஆகிய இடங்களைத் தொடர்ந்து செரியானிலும் காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு 200ஐத் தாண்டியது.
லுபோக் அந்துவில் மிக அதிகபட்சமாகக் குறியீடு 230ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து லுண்டு (228), ஸ்ரீ அமான் (227), செரியான் (204) ஆகியவை பதிவாகின.


