வாஷிங்டன்: கனடாவுடனான எல்லா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
திரு டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 23) இவ்வாறு சொன்னார்.
வரிவிதிப்புக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனல்ட் ரீகன் பேசியதாக கனடா வெளியிட்ட விளம்பரம் போலியானது என்று திரு டிரம்ப் சாடினார். அதனைத் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கனடிய எஃகு, அலுமினியம் உள்ளிட்ட பொருள்கள் மீது திரு டிரம்ப் வரி விதித்திருந்தார். அதனையடுத்து ஒட்டாவாவும் பதில் நடவடிக்கை எடுத்தது.
எஃகு, அலுமினிய வர்த்தகத்தில் ஒப்பந்தம் எட்ட இரு தரப்பும் பல வாரங்களாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
“கனடாவின் மிக மோசமான நடத்தை காரணமாக அவர்களுடனான எல்லா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் ரத்து செய்யப்படுகின்றன,” என்றார் அமெரிக்க அதிபர்.
ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் தமது சினத்தை வெளிப்படுத்தும் வகையில் அதனைப் பதிவிட்டார் திரு டிரம்ப்.
தொடர்புடைய செய்திகள்
தமது மாநிலம் வெளியிட்ட சம்பந்தப்பட்ட விளம்பரத்தின், வரிவிதிப்புக்கு எதிரான கருப்பொருள் திரு டிரம்ப்பின் கவனத்தை ஈர்த்ததாக ஒன்டாரியோ முதல்வர் டூக் ஃபோர்ட் இவ்வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.


