முகைதீனின் முடிவால் கூட்டணித் தலைவர்கள் ஏமாற்றம்: அஸ்மின் அலி

முகைதீனின் முடிவால் கூட்டணித் தலைவர்கள் ஏமாற்றம்: அஸ்மின் அலி

2 mins read
4482ce5b-60a7-47e5-b5e7-ff0ebc39e43c
பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகத் திரு முகைதீன் யாசின் லண்டனில் இருந்தபடியே அறிவித்தார் என்று பெர்சத்துக் கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி (படம்) தெரிவித்தார். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: கூட்டணித் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திரு முகைதீன் யாசின் தன்னிச்சையாக அறிவித்தார் என்று பெர்சத்துக் கட்சியின் தலைமைச் செயலாளர் முகம்மது அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்தபடியே திரு முகைதீன் தமது முடிவை அறிவித்ததாகத் திரு அஸ்மின் குறிப்பிட்டார்.

தம்மிடம்கூட அதுபற்றித் திரு முகைதீன் முன்கூட்டியே தெரிவிக்காததால் தாம் ஏமாற்றம் அடைந்ததாக அவர் சொன்னார்.

“நாங்கள் தனித்த ஒரு கட்சி மட்டுமன்று, ஒரு கூட்டணியையும் நிர்வகிக்கிறோம். சிறிய கிளையை நடத்துவதுகூட சவால்மிக்கது. இந்நிலையில், வெவ்வேறு கருத்தியல்களையும் பின்னணிகளையும் கொண்ட நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டணியைத் திரு முகைதீன் வெற்றிகரமாக நிர்வகித்தார்.

“கடந்த ஐந்தாண்டுகளாக அவர் பெரிக்காத்தான் கூட்டணிக்குத் தலைமையேற்று வழிநடத்தி வந்துள்ளார். அக்கூட்டணி உருவானதில் இருந்தே அதன் தலைவராகச் செயல்பட்ட அவர், பல கட்சிகளை அதன்கீழ் திரளச் செய்தார்,” என்று ‘ஓரியன்டல் டெய்லி’ எனும் சீன நாளிதழிடம் திரு அஸ்மின் கூறினார்.

“கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றக் கட்சிகளுக்கும் தலைமைத்துவ வாய்ப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறோம்,” என்றார் அவர்.

முன்னாள் மலேசியப் பிரதமரான திரு முகைதீன் தாய்நாடு திரும்பியதும் அவருடன் அதுபற்றிக் கலந்து பேசியதாகத் திரு அஸ்மின் தெரிவித்தார்.

மற்றப் பங்காளிகளும் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்பதற்குத் திரு முகைதீன் முன்வைத்த காரணங்களைக் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்றும் அவரது முடிவை மதிக்கிறோம் என்றும் திரு அஸ்மின் கூறினார்.

பதவி விலகல் நடைமுறை இன்னும் முடிவடையாததால் பெரிக்கத்தான் கூட்டணியின் தலைவராகத் திரு முகைதீன் நீடிக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்