20 ஆண்டுகளுக்குமுன் திருடப்பட்ட முதலையைக் கண்டுபிடித்த அதிகாரிகள்

1 mins read
452609df-3eca-49be-afd8-6fb5eb96e6e2
படம்: TEXAS GAME WARDEN -

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டதாக நம்பப்படும் முதலையை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏறத்தாழ 2.5 மீட்டர் நீளமுடைய அந்த முதலை, விலங்கியல் பூங்காவிற்கு 50 மைல் தொலைவில் இருக்கும் ஒரு வீட்டின் முற்றத்திலிருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

விலங்கியல் பூங்காவில் தொண்டூழியம் செய்ய வந்தவர்களில் ஒருவர் முதலையைத் திருடிச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலை முட்டைக்குள் இருந்தபோதோ அல்லது குட்டியாக இருந்தபோதோ திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

மார்ச் 3ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட முதலை, மூன்று நாள்களுக்குப் பிறகு விலங்கியல் பூங்காவில் சேர்க்கப்பட்டது.

முதலைகள் செல்லப் பிராணிகள் இல்லை என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

வீட்டுச் சூழலில் வளர்த்த முதலை இப்போது அதற்கு உகந்த சூழலில் வசதியாக வளர்ந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.