கோலாலம்பூர்: கடந்த பத்தாண்டுகளில் மொத்தம் 97,318 மலேசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக மலேசியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், 2015ஆம் ஆண்டுக்கும் 2025 ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் குடியுரிமை துறந்தவர்களின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2015ல், 7,394 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்தனர். 2016ல், 8,654 மலேசியர்களும் 2017ஆம் ஆண்டில் 7,583 மலேசியர்களும் குடியுரிமையைத் துறந்தனர். 2018ஆம் ஆண்டில் 7,665ஆக அந்த எண்ணிக்கை இருந்தது. எனினும் 2019ல், 13,362 பேர் குடியுரிமையைத் துறந்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தப் போக்கு 2020ஆம் ஆண்டில் 5,591 ஆகக் குறைந்தது. அதற்கு, கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக இருக்காலம். இருப்பினும், 2021ல் 7,956ஆகவும், 2022ல் 5,623ஆகவும் மீண்டும் எண்ணிக்கை உயர்ந்தது.
2023ஆம் ஆண்டில் 11,500 மலேசியர்கள் குடியுரிமையைத் துறந்தனர். ஆக அதிகமாக 2024ல் 16,930 பேர் குடியுரிமையைத் துறந்தனர். இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி 6,060 மலேசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த தசாப்தத்தில், மலேசியா குறிப்பிடத்தக்க அளவில் திறனாளர்களை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. வாய்ப்புகளைத் தேடி, திறனாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் அதிக சம்பளம், சிறந்த வேலை வாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பின்பற்றுவதால் இந்தப் போக்கு உந்துதலாக இருக்கிறது.
திறனாளர்கள் இழப்பால், சுகாதாரப் பராமரிப்பு, பொறியியல், நிதி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட துறைகள்.