லண்டன்: ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகை காரணமாக, லண்டன் உலோகச் சந்தையில் அலுமினியத்தின் விலை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை (ஏப்ரல் 13) அலுமினியத்தின் விலை 3.1 விழுக்காடு உயர்ந்து, ஒரு மெட்ரிக் டன் 3,607.50 அமெரிக்க டாலராக நிலைபெற்றது. 2026ஆம் ஆண்டில் மட்டும் அலுமினியத்தின் விலை 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, உடனடி விநியோகத்திற்கான ஒப்பந்த விலை (Spot contracts) எதிர்கால விலையைவிட 43 விழுக்காடு உயர்ந்துள்ளது இது 2007க்குப் பிறகு ஏற்பட்ட மிக அதிகமான உயர்வாகும்.
உலகளாவிய அலுமினிய உற்பத்தியில் மத்திய கிழக்கு நாடுகள் 9 விழுக்காடு பங்கு வகிக்கின்றன. ஈரான் போரால் அவ்வட்டாரத்தின் முன்னணி உற்பத்தியாளரான ‘எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம்’ நிறுவனம் விநியோகத்தில் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
கட்டுமானம், மின் வாகனங்கள், சூரிய சக்தித் தகடுகள் தயாரிப்பில் அலுமினியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனினும், சீனாவில் தேவை குறைந்து வருவது லண்டன் சந்தையில் அலுமினிய விலையேற்றத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

