சான் பிரான்சிஸ்கோ: அமேசான் நிறுவனம் அதன் 30,000க்கும் அதிகமான அலுவலக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட்-19 காலகட்டத்தில் அமேசான் நிறுவனம் தேவையைவிடவும் அதிகமான ஊழியர்களை வேலைக்குச் சேர்த்ததாகவும் அதனால் தற்போது செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தில் மொத்தம் 1.55 மில்லியன் ஊழியர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்களில் 350,000 பேர் மட்டுமே அலுவலக ஊழியர்கள். அந்த அலுவலக ஊழியர்களில் தற்போது 10 விழுக்காட்டினர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் கிட்டத்தட்ட 27,000 பேரை ஆட்குறைப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்குறைப்பு குறித்து அமேசான் பேச்சாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமேசான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஊழியர் அணியைக் குறைத்துவருகிறது.
இவ்வாரம் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் மனிதவளம், சேவை, இணையக் கட்டமைப்பு உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். மனிதவளப் பிரிவில் மட்டும் 15 விழுக்காடு ஊழியர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊழியர் பிரிவுகளைக் கையாளும் நிர்வாகிகளையும் ஆட்குறைப்பு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பவசதிகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் கூடுதலான ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அமேசான் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிறுவனத்தின் நிதி முன்னுரிமை மாறும்போது நடவடிக்கைகளும் மாறும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு தொடக்கத்தில் அமேசான் அதன் அலுவலக ஊழியர்கள் அனைவரையும் வாரத்திற்கு ஐந்து நாள்கள் அலுவலகம் வரவேண்டும் என்று விதிமுறைகளை மாற்றியது. இதனால், தொழில்நுட்பப் பிரிவில் பலர் வேலையிலிருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றாகப் பலர் விதிமுறைகளுக்கு இணங்கியது கவனிப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

