கோலாலம்பூர்: மலேசியப் பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவதற்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா, திங்கட்கிழமையன்று (மார்ச் 2) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. நகர்ப்புற வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அளித்த சீர்திருத்த வாக்குறுதிகளில் இது முக்கியமான ஒன்றாகும்.
மலேசியக் கூட்டரசு அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 148 வாக்குகள் தேவை. ஆனால், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 146 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா தோல்வியடைந்தது. 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை, 32 பேர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்த பிரதமர் அலுவலக அமைச்சர் அஸாலினா ஒத்மான் சயீது, 10 ஆண்டுகால வரம்பை அறிமுகப்படுத்துவது பாரபட்சமில்லாமல் உறுதியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று முன்னதாகக் கூறியிருந்தார்.
“நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட வாய்ப்புள்ளதால், இந்த வரம்பை நாடாளுமன்றக் காலத்துடன் இணைக்காமல் இருப்பது பொருத்தமானது. இத்தகைய அணுகுமுறை நிர்வாக நிலையற்ற தன்மையை தவிர்க்க உதவுவதுடன், அதிகாரம் நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் இருப்பதையும் தடுக்கும்,” என்று வாக்கெடுப்புக்கு முன்னதாக அவர் விளக்கமளித்தார். இது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறையிலேயே முதல்முறையாகப் பிரதமரின் பதவிக்காலத்திற்கு வரம்பு விதிக்கும் இந்தச் சீர்திருத்தம், ஜனவரி 5ஆம் தேதியன்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்த நிறுவனச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். இது தவிர, தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்புகளைப் பிரிப்பதற்கான சீர்திருத்தம் மார்ச் 3ஆம் தேதியன்று விவாதத்திற்கு வரவுள்ளது.
பிரதமர் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிக்கையில் பிரதமரின் பதவிக்காலத்துக்கு வரம்பு விதிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மலேசிய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் (2003 வரை 22 ஆண்டுகள், பின்னர் 2018-2020 வரை 22 மாதங்கள்) அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார்.
அதிகாரம் ஒருவரிடமே நீண்ட காலத்துக்குத் தொடர்வது குறித்து அப்போதிலிருந்தே அதிருப்திக் குரல்கள் எழுந்தன. இந்த நிலை மீண்டும் ஏற்படாதிருக்க பிரதமரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் வரை ஒருவர் பிரதமராகப் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

