அரசாங்கத்தில் காவல்துறையினர் பங்கேற்க சட்டதிருத்தம்: இந்தோனீசியா

அரசாங்கத்தில் காவல்துறையினர் பங்கேற்க சட்டதிருத்தம்: இந்தோனீசியா

2 mins read
78199ebd-dcf5-42d2-a05d-14916ac29601
ஜகார்த்தாவில் மே மாதம் வெளிநாட்டு இணையக் குற்றக் கும்பல் முறியடிப்பு நடவடிக்கையில் செயல்பட்ட ஆயுதம் ஏந்திய இந்தோனீசியக் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: தேசிய காவல்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, அத்துறையின் அதிகாரிகள் அரசாங்கப் பதவிகளை ஏற்று சேவையாற்றுவதற்கான மசோதாவை இந்தோனீசிய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

அச்சட்டத் திருத்தங்களின்படி, காவல்துறை அதிகாரிகள் அரசாங்கப் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு காவல்துறையில் இருந்து பதவி விலகத் தேவையில்லை. இதேபோன்ற சட்டத் திருத்தங்கள் 2025ஆம் ஆண்டில் இந்தோனீசிய ராணுவ அதிகாரிகளுக்கும் செய்யப்பட்டது.

அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 2024ல் பதிவியேற்றதில் இருந்து அந்நாட்டின் பொதுச் சேவைகளில் இணைந்து பணியாற்றும் நோக்குடன், ராணுவ அதிகாரிகளின் பொறுப்புகளை விரிவாக்கினார்.

முக்கியமாக, இலவச உணவுத் திட்டம் போன்ற சுய சார்புள்ள மேம்படுத்தப்பட்ட பொது நடவடிக்கைகளில் காவல்துறையினரும் பங்காற்றி வருகின்றனர். இந்தோனீசியாவின் சிறப்புப் படைகளின் முன்னாள் தளபதியாக இருந்த அதிபர், பல மூத்த ராணுவ, காவல்துறை அதிகாரிகளை அண்மைய காலமாக அரசாங்க நிர்வாகத்தில் இணைத்துவந்துள்ளார்.

காவல்துறையைக் கடந்து நாட்டின் வேறுபல அரசாங்க அமைப்புகளில் அல்லது அமைச்சுகளில் பணியாற்ற புதிய சட்டப்படி அதிகாரிகள் பதவி விலகத் தேவையில்லை.

காவல்துறை சார்ந்த செயல்பாடுகள் உள்ளடங்கிய மாநிலங்களின் பொதுச் சேவைக்கானப் பதவிகளுக்கும் இச்சட்டம் பொருந்தும். உதாரணமாக பொதுப் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம், பொதுமக்கள் நாடும் அமைச்சுகள், முகவைகள் ஆகியவற்றின் பராமரிப்பு போன்றவை காவல்துறை அதிகாரிகளின் அனுபவத்தை எதிர்பார்க்கும் இடங்களாகும்.

மேலும் அதிபர், அமைச்சுகள், அரசாங்க முகவைகளின் வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறை அதிகாரிகள் வேறு துறைகளிலும் பணியமர்த்தப்படலாம் என்று சட்ட திருத்தம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் சட்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாதோரும் இந்தோனீசியாவில் உள்ளனர்.

சேவையில் உள்ள காவல்துறை அதிகாரிகளை அரசாங்க அமைப்புகளில் பணியமர்த்துவது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று இந்தோனீசிய சட்ட உதவி அறநிறுவனத்தின் உறுப்பினரான முகம்மது இஸ்நுர் கருத்துரைத்தார்.

காவல்துறையின் நிபுணத்துவமும் அரசாங்க அதிகாரிகளுக்குத் தகுதிக்கேற்ற பதவி வழங்கப்படும் கட்டமைப்பும் இதனால் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
அரசாங்கம்சட்டத் திருத்தம்இந்தோனீசியாநாடாளுமன்றம்காவல்துறைராணுவம்அதிகாரி