அமெரிக்கா: ஐந்து நாள்களில் 10,000 கள்ளக் குடியேறிகள் கைது

அமெரிக்கா: ஐந்து நாள்களில் 10,000 கள்ளக் குடியேறிகள் கைது

1 mins read
9933edae-3cae-412e-a718-c2613bb1fac4
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 1,000 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போதைய கைது எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கக் குடிநுழைவு, சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 10,000க்கும் அதிகமானோரைத் தடுத்து வைத்துள்ளனர்.

கைது நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அந்தத் துறையினருக்கு விடுக்கப்பட்ட அழுத்தமே இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

நாடு கடத்தப்பட வேண்டிய குடியேறிகளைப் பிடிப்பதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடிநுழைவு, சுங்க அமலாக்கத்துறை அமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடிநுழைவுப் பதிவுகளை மேற்கொள்ள வந்தவர்கள், வாகனச் சோதனைகளில் சிக்கியவர்கள், சாலை சோதனையில் சிக்கியவர்கள் எனப் பல நடவடிக்கைகள் மூலம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தத் தீவிர நடவடிக்கை நல்ல பலனை அளித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 1,000 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போதைய கைது எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த வேகம் எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இனிமேல் நாளொன்றுக்கு 2,000 பேர் கைது செய்யப்படுவதே புதிய இலக்கு என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரிய அளவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளைப் போல் இல்லாமல், தற்போதைய கைது நடவடிக்கைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காகைதுகுடியேற்றம்