அமெரிக்காவும் ஈரானும் அணுத் திட்டம் குறித்து மீண்டும் பேச்சு

அமெரிக்காவும் ஈரானும் அணுத் திட்டம் குறித்து மீண்டும் பேச்சு

2 mins read
bd9af2ff-2a2a-46ee-a46e-baac7ea16191
அமெரிக்க, ஈரானியக் கொடிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: ஈரானும் அமெரிக்காவும் ஜெனீவாவில் பேச்சு நடத்துகின்றன.

நீண்டகாலமாக இரு தரப்புக்கும் இடையில் நிலவும் அணுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவை முனைகின்றன.

அமெரிக்கா ஈரானுக்கு அருகில் பெரிய அளவில் ராணுவத் தளவாடங்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் அண்மைப் பேச்சு, வா‌ஷிங்டன் மீண்டும் ஈரானைத் தாக்குவதைத் தடுப்பதிலும் கவனம் செலுத்தும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இரு தரப்பும் இம்மாதம் (பிப்ரவரி) மீண்டும் சமரசப் பேச்சைத் தொடங்கின. டெஹ்ரானின் அணுத் திட்டம், அணுவாயுதங்களைத் தயாரிப்பதுதான் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் நம்புகின்றன. ஆனால் ஈரான் அதனை மறுக்கிறது. அணுத் திட்டம் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கே என்று அது கூறுகிறது.

வியாழக்கிழமை (பிப்ரவரி 26) பேச்சில் அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃபும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரட் கு‌‌ஷ்னரும் கலந்துகொள்கின்றனர். ஈரானியத் தரப்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி பங்கேற்கிறார். சென்ற வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து அண்மைப் பேச்சு இடம்பெறுகிறது. அதில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் செய்த பணியை ஓமான் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடி ஏற்றிருந்தார்.

அதிபர் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில், ஈரான்மீதான உத்தேசத் தாக்குதல் பற்றிப் பேசியிருந்தார். அரசதந்திர வழிகளின் மூலம் தீர்வுகாண விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். ஆயினும் டெ‌‌ஹ்ரானிடம் அணுவாயுதம் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றார் திரு டிரம்ப்.

குறிப்புச் சொற்கள்