தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவும் ர‌‌ஷ்யாவும் எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்து விவாதம்

1 mins read
27cc55b8-aebf-403c-99c0-6dce32d513fc
ர‌‌ஷ்யாவின் சாக்லன் தீவில் செயல்படும் திரவ இயற்கை எரிவாயு ஆலை. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.

மாஸ்கோ: அமெரிக்க, ர‌‌ஷ்ய அதிகாரிகள் எரிசக்தி உடன்பாடுகள் குறித்து விவாதித்திருக்கின்றனர். இம்மாதம் (ஆகஸ்ட் 2025) நடைபெற்ற உக்ரேனிய அமைதிப் பேச்சுக்கு இடையில் அவர்கள் எரிசக்தி பற்றியும் பேசினர்.

உக்ரேனில் அமைதியைக் கொண்டுவரக் கிரெம்ளினுக்கு அந்த ஒப்பந்தங்கள் ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் வா‌ஷிங்டன் ர‌‌ஷ்யாவுக்கு எதிரான தடைகளைத் தளர்த்தவும் அவை வழிவிடும் என்றும் கருதப்படுகிறது.

2022ஆம் ஆண்டு உக்ரேன் மீது ர‌‌ஷ்யா படையெடுத்தது. பின்னர் உலகளாவிய நிலையில் அதன் எரிசக்தித் துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் பெருமளவு குறைந்தன.

எக்ஸான் மொபில் ர‌‌ஷ்யாவின் சாக்லன்-1 எண்ணெய், எரிவாயுத் திட்டத்தில் மீண்டும் இணையும் சாத்தியம் குறித்து அதிகாரிகள் பேசியதாகத் தெரிகிறது.

ர‌‌ஷ்யா அதன் திரவ இயற்கை எரிவாயுத் திட்டங்களுக்காக அமெரிக்காவிடமிருந்து சாதனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பனிக்கட்டிகளை உடைக்கும் ஆற்றல்பெற்ற அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல்களை ர‌‌ஷ்யாவிடமிருந்து அமெரிக்கா வாங்குவது பற்றியும் அதிகாரிகள் பேசினர்.

இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்றது. வெள்ளை மாளிகையிலும் இது விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இம்மாதம் 15ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டின்போதும் இந்த விவகாரங்கள் பேசப்பட்டன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரின் தேசியப் பாதுகாப்புக் குழுவினரும் போரை நிறுத்தத் தொடர்ந்து ர‌‌ஷ்ய, உக்ரேனிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்