வாஷிங்டன்: பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் முக்கிய ராணுவ நிலைகளைத் தாக்கியிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
கார்க் தீவில் ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
“மத்திய கிழக்கின் வரலாற்றில் ஆகக் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஒன்றை அமெரிக்கா நடத்தியிருக்கிறது,” என்றார் அவர்.
எரிசக்திப் போக்குவரத்தை டெஹ்ரான் தொடர்ந்து முடக்கினால் எண்ணெய் உள்கட்டமைப்பைக் குறிவைத்துக் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று திரு டிரம்ப் எச்சரித்தார்.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்து இரண்டு வாரமாகிவிட்ட நிலையில் மத்திய கிழக்கு வட்டாரத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது.
“நாகரிகம் கருதி, தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை முற்றாக அழிக்காமல் விட்டுவைத்துள்ளேன்,” என்று திரு டிரம்ப் கூறினார்.
ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்துசெல்லும் கப்பல்களை ஈரான் இடைமறித்தால் உடனே தமது முடிவை மாற்றிக்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார். சமூக ஊடகத்தில் திரு டிரம்ப் அந்தக் கருத்துகளைப் பதிவிட்டார்.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைகளை வாஷிங்டன் தேவைப்படும்வரை தொடரும் என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை கூடிய விரைவில் பாதுகாப்பளிக்கும் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, கார்க் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் எண்ணெய் உட்கட்டமைப்பு எதுவும் சேதமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்களைச் சுட்டி, ஈரானின் ஃபார்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

