அமெரிக்காவை இனியும் நம்ப முடியாது: ஈரான்

அமெரிக்காவை இனியும் நம்ப முடியாது: ஈரான்

2 mins read
1135d64d-4966-4aab-b337-1a0567478938
மே 29ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக டெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. - படம்: ஏஎஃப்பி

டெஹ்ரான்: ஈரானிய தலைமை சமரசப் பேச்சாளர், அமெரிக்காவை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் வரை அமெரிக்காவுடன் எந்தவோர் ஒப்பந்தத்தையும் ஈரான் ஏற்காது என்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) அவர் தெரிவித்தார்.

ஈரானுடனான உத்தேசப் போர் நிறுத்த உடன்பாட்டில் சில நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாக்குவதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகம்மது பக்கர் கலிபாஃபாவின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பல வாரங்களாக நீடித்த பதற்றமான பேச்சுகளுக்குப் பிறகு மத்திய கிழக்குப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவரவும் ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கவும் வரையப்பட்ட ஒப்பந்தத்தில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் காலதாமதத்திற்கு வழி வகுக்கும்.

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த வேளையில் பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகத் தாக்கியதில் ஈரானின் உச்சத் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

அணுசக்தித் திட்டத்தை அமைதிக்காகவே பயன்படுத்த விரும்புவதாக ஈரான் வலியுறுத்தி வருகிறது. ஆயினும் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ஈரானைச் சந்தேகிக்கின்றன.

அதிபர் டிரம்ப் செய்வதாகக் கூறப்பட்ட மாற்றங்கள் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கடுமையான நிபந்தனைகளுடன்கூடிய புதிய கட்டமைப்பை ஈரானின் பரிசீலினைக்கு டிரம்ப் அனுப்பியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ், ஆக்சியோஸ் ஆகியவை மே 30 அன்று செய்தி வெளியிட்டன.

ஈரான் எந்தவித அணுவாயுதத்தையும் உருவாக்குவதைத் தடுப்பதும் முற்றுகையிடப்பட்ட ஹோர்முஸ் கப்பல் பாதையை மீண்டும் திறப்பதும் தமது முன்னுரிமைகளில் அடங்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

“அணுவாயுதங்கள் இருக்கமாட்டா என்ற உத்தரவாதம்தான் எனக்குத் தேவை. அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்,” என்று மே 30ஆம் தேதியன்று ஃபாக்ஸ் நியூஸ் ஒளிபரப்பிய நேர்காணலில் தமது மருமகள் லாரா டிரம்ப்பிடம் அவர் தெரிவித்தார்.

ஆனால், டிரம்ப்மீது ஈரானுக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வருகிறது.

“ஈரானிய மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்யும் வரை எந்தவோர் ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்,” என்று அரசாங்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் திரு கலிபாஃப் கூறினார்.

“எதிரியின் வார்த்தைகள், வாக்குறுதிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை,” என்று கூறிய அவர், “எங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு முன்பு எங்களுடைய உறுதியான இலக்குகளை அடைவதே குறிக்கோள்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்