வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரான முறியடிப்பை விரிவுபடுத்தும் அமெரிக்கா

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரான முறியடிப்பை விரிவுபடுத்தும் அமெரிக்கா

இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ, எச்சிஎல் ஆகிய இந்திய நிறுவனங்கள் அமெரிக்க நிரந்தரவாச அட்டைத் திட்டத்திலிருந்து தற்காலிக நீக்கம்
கோப்புப் படம்: ‌ஷட்டர்ஸ்டாக்

09 Oct 2026 - 1:49 pm

2 mins read

வா‌ஷிங்டன்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா விரிவுபடுத்துகிறது.

அந்த வகையில், இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ, எச்சிஎல் உள்ளிட்ட இந்தியத் தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் அமெரிக்காவின் நிரந்தரவாச அட்டைத் திட்டத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. கோக்னிஸன்ட், கேப்ஜெமினை ஆகியவையும் அதிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தங்களின் செலவில் அமெரிக்க நிரந்தரவாசத் தகுதியைப் பெற்றுத்தர நிறுவனங்கள் அத்திட்டத்தைப் பயன்படுத்திவருகின்றன.

நிரந்தர ஊழியர்ச் சான்றிதழ் (பெர்ம்) எனும் அத்திட்டத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அமெரிக்க ஊழியரணி அமைச்சு தற்காலிகமாக நீக்குவதாக அந்நாட்டின் ஊழியரணி அமைச்சர் கீத் சோண்டர்லிங் தெரிவித்தார். அத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது இதற்குக் காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை

மைக்ரோசாஃப்ட், அடோபி ஆகிய நிறுவனங்களையும் அமெரிக்க ஊழியரணி அமைச்சு திட்டத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியரணிச் சான்றிதழ் விண்ணப்பங்களைத் தாங்கள் இனி செயல்படுத்தப்போவதில்லை என்று அமைச்சு தெரிவித்தது.

இந்நடவடிக்கை, இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களைப் பாதிக்கும் ஒன்று. வேலையை மையமாக வைத்து, நிரந்தரவாசத் தகுதியைப் பெறுவதற்கான முறையாக ‘பெர்ம்’ இருந்துவருவது அதற்குக் காரணம்.

பல்கலைக்கழகங்களிடம் விசாரணை

மேலும், ஒன்பது உயர்தர பல்கலைக்கழகங்களிடமும் டிரம்ப்பின் அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்நடவடிக்கைகள், ஏமாற்றுச் செயல்களையும் அமெரிக்கர்கள் வேலையை இழப்பதையும் குறிவைப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

ஹார்வர்ட், யேல், ஸ்டேன்ஃபர்ட் முதலியவை அப்பல்கலைக்கழங்களில் அடங்கும். அமெரிக்கர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்தைக் குறைப்பதற்காகப் பரிமாற்றப் பயணி விசாக்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் அவற்றிடம் விசாரணை நடத்தப்படுவதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறினார்.

பிரவுன், மேசச்சூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகியவையும் சம்பந்தப்பட்ட ஒன்பது பல்கலைக்கழங்களில் அடங்கும். இவை, திறமையான வெளிநாட்டு ஊழியர்த் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள ஆகக் கடுமையான நடவடிக்கைகளாகும்.

“இந்த நடைமுறையை அனைவரும் அறிவர் என்று எனக்குத் தெரியும். ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட பணியாளர்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து அமெரிக்க ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்வது. அதிலும் நிறுவனமான இருந்தால், அமெரிக்க ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து அவர்களுக்குப் பதிலாக, அமெரிக்காவில் இருக்கக்கூடாதவர்கள் என நம்பப்படுபவர்களையும் வேலைக்கு எடுத்து அதிக லாபத்தை ஈட்டுவது,” என்று திரு வான்ஸ் குற்றஞ்சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காநிரந்தரவாசிஊழியர்விசாஇந்தியா