உலகக் கிண்ணத்தைப் பாதுகாப்பாக நடத்துவதில் கவனம் செலுத்தும் அமெரிக்கா

உலகக் கிண்ணத்தைப் பாதுகாப்பாக நடத்துவதில் கவனம் செலுத்தும் அமெரிக்கா

2 mins read
9e4b7025-4a1e-41bb-b8fc-f0e2e235fdcd
சனிக்கிழமை (ஜூன் 13) நடந்த ஆட்டத்தைக் காண ஆயிரகணக்கான மக்கள் லாஸ் ஏஞ்சலிஸ் அரங்கத்தில் கூடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் உளவுத்துறைக்கு இருந்த முக்கியமான அதிகாரங்களில் ஒன்று வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 12) காலாவதியானது. இதனால் அந்நாட்டின் பாதுகாப்பிற்கும் தற்போது நடந்துவரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கவலை எழுந்துள்ளது.

வெளிநாட்டு உளவு கண்காணிப்புச் சட்டத்தின் பிரிவு 702க்கு கீழ் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ஒருவர் அமெரிக்காவில் உள்ளவரைத் தொடர்பு கொண்டால் தொடர்பில் இருக்கும் நபரைக் கைது உத்தரவு இல்லாமல் அதிகாரிகளால் கைது செய்யமுடியும். இது ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

இந்தச் சட்டத்தைத் தொடர அமெரிக்காவின் மேலவை, கீழவைகளில் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவை உறுப்பினர்கள் சட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

அமெரிக்காவின் உளவுத்துறைக்கு இது நெருக்கடியைத் தரக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மெதுவடையலாம் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

தற்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் வெடித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு வட்டாரம் பதற்றமான நிலையில் உள்ளது.

இந்தச் சூழலில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி நடந்து வருகிறது. ஆட்டங்களை எந்தவிதப் பாதுகாப்புக் குறைபாடின்றி முடிப்பதில் தற்போது அமெரிக்கா களமிறங்கியுள்ளது.

“உலகக் கிண்ணத்தைப் பாதுகாப்பாக நடத்தி முடிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத சம்பவங்களை முறியடிக்க அனைத்தும் செய்யப்படும்,” என்று எஃப்பிஐ தலைவர் கா‌ஷ் பட்டேல் தெரிவித்தார். “விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், பொதுமக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமானது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் 11 நகரங்களில் உலகக் கிண்ண ஆட்டங்கள் நடக்கின்றன. ஆட்டத்தைக் கண்டு களிக்க உலக நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் அந்நகரங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஉலகக் கிண்ணம்பாதுகாப்பு