வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் மறைமுகமாக எச்சரித்து வரும் நிலையில், ஒப்பந்தத்திற்கு இணங்குவதே ஈரானுக்கு நல்லதாகும் என வெள்ளை மாளிகை புதன்கிழமை (பிப்ரவரி 18) கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் கடும் நடவடிக்கை எடுத்ததில் பலர் உயிரிழந்ததையடுத்து, அமெரிக்க, ஈரானியத் தரப்பினரும் அண்மையில் மீண்டும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரான் மீது இஸ்ரேல் திடீர்த் தாக்குதல் நடத்தியதையடுத்து, முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை நின்றுபோனது.
இந்நிலையில், திரு டிரம்ப்பின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வது ஈரானுக்கு நல்லது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரானை அமெரிக்கா தாக்கக்கூடும் என்று புதன்கிழமை (பிப்ரவரி 18) தமது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் திரு டிரம்ப் மறைமுகமாகக் கூறினார்.
தீவைத் தக்கவைக்க பிரிட்டனுக்கு நெருக்குதல்
இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவின் மீதான அரசுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்றும் பிரிட்டனைத் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
ஒப்பந்தத்திற்கு ஈரான் இணங்காவிட்டால், அந்தத் தீவில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) ராணுவ விமானத்தளம் தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவுடனான வருங்காலத் திட்டங்களை உறுதிசெய்வதற்கான வரைவுக் கட்டமைப்பைத் தயாரித்து வருவதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) புதன்கிழமை முன்னேரத்தில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னதாக, ஈரானும் அமெரிக்காவும் ஜெனீவாவில் ஓமான் வழிநடத்திய சமரசப் பேச்சுவார்த்தையில் பங்குகொண்டன.
இந்நிலையில், அமெரிக்காவுடன் தனது நாடு போரை விரும்பவில்லை என்றாலும், நிபந்தனைகளை முன்வைக்கும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.
மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும்
இந்நிலையில், இந்த வாரத்தின் இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பெயர் வெளியிடப்படாத தரப்புகள் கூறி வருகின்றன.
ஆயினும், இது பற்றிய உறுதியான முடிவைத் திரு டிரம்ப் இன்னும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தனது அணுவாயுதத் திட்டத்தை நிறுத்த வேண்டுமெனக் கோரி வந்த திரு டிரம்ப், உடன்படிக்கை எட்டப்படவில்லை என்றால் தாம் ராணுவ பலத்தைப் பயன்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.

