சோல்: வடகொரியாவின் ஏவுகணைகளையும் அணுவாயுத மிரட்டலையும் எதிர்கொள்ளும் விதமாகத் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள், செப்டம்பர் 9 முதல் 11ஆம் தேதிவரை மூன்று நாள் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளன.
ஆண்டுதோறும் நடத்தப்படும் அப்பயிற்சி குறித்துத் தென்கொரியா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) உறுதிப்படுத்தியது.
தற்காப்பு நடவடிக்கைகளை மையமாகக் கொண்ட அப்பயிற்சிகள், அனைத்துலகக் கடல் பகுதியில், தென்கொரியத் தீவான ஜெஜூவின் தென் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் இடம்பெறும் என்று தென் கொரிய ராணுவத்தின் முப்படைத் தலைவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் சிறப்பு ராணுவப் படைக்கும் (மரின் கார்ப்ஸ்) தென்கொரியப் படையினருக்கும் இடையே நடக்கவிருந்த கூட்டுப்பயிற்சிகளை ரத்து செய்ததோடு, அந்நாட்டுடன் திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் ரத்து செய்த பிறகு இந்த மூன்று நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செயல்பாடுகளுக்கான காரணமாக ஈரான் போரில் தென்கொரியா உதவ முன்வராததை அதிபர் டிரம்ப் சாடியிருந்தார். மேலும் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவுடன் நடக்கவிருந்த 10 நாள் ராணுவப் பயிற்சியை அமெரிக்கா நான்கு நாள்களாகக் குறைத்துக்கொண்டது.
தென்கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து நடத்தும் ராணுவப் பயிற்சிகள் வடகொரியாவுக்குத் தவறான செய்தியை உணர்த்துவதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் புதிய உச்சநிலை உச்சநிலைச் சந்திப்பை நடத்தவும் அமெரிக்க அதிபர் முயன்றுவருகிறார். அவ்விருவரும் கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இருமுறை சந்தித்துள்ளனர்.


