வாஷிங்டன்: கிரீன்லாந்தில் தனது ராணுவப் பலத்தை நிலைநிறுத்தும் நோக்கில் டென்மார்க், கிரீன்லாந்து ஆகியவற்றுடன் அமெரிக்கா உடன்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
அமெரிக்காவிற்கு எதிரான நாடுகள் கிரீன்லாந்தில் அவற்றின் சொந்த ராணுவத் தளங்களை அமைப்பதைத் தடுக்க அந்த ஒப்பந்தம் முற்படுவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் எந்த எதிரி நாடாலும் கிரீன்லாந்தில் சர்ச்சைக்குரிய முதலீடுகள் செய்ய முடியாது என்று தமது ட்ருத் சோஷல் தளத்தில் பதிவிட்ட திரு டிரம்ப், டென்மார்க், கிரீன்லாந்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு காலாவதியாகும் நாள் கிடையாது என்றார்.
“கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமெரிக்காவிற்கு காலவரையறையின்றி முழு அனுமதி இருப்பதை உறுதிசெய்ய டென்மார்க், கிரீன்லாந்து ஆகியவற்றுடன் எனது உத்தரவின்படி பிரதிநிதிகள் இணைந்து செயல்பட்டனர்,” என்றார் திரு டிரம்ப்.
1951ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி கிரீன்லாந்தின் வான்வெளியைப் பயன்படுத்தவும் அங்குத் தளம் அமைக்கவும் அமெரிக்காவிற்குக் கிட்டத்தட்ட முழு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கூடிய விரைவில் கிரீன்லாந்தில் அதன் ராணுவத் தாக்கத்தை அதிகரிக்கும் என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.
“இது, அமெரிக்காவின் கனவு நனவாகும் நாள்,” என்று திரு டிரம்ப் வருணித்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் வடக்கு அல்டாண்டிக், ஆர்க்டிக் வட்டாரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று டென்மார்க் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் அனைத்துத் தரப்புக்கும் பயனளிக்கும் என்றார் கிரீன்லாந்துப் பிரதமர் ஹென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன்.
தாதுப் பொருள்கள் கொட்டிக்கிடக்கும் கிரீன்லாந்தைக் கைப்பற்ற திரு டிரம்ப் பல மாதங்களாக முயற்சி செய்துவந்தார். கிரீன்லாந்தை ரஷ்யா, சீனா உள்ளிட்ட எதிரி நாடுகள் எளிதில் அகப்படுத்திவிட முடியும் என்பதால் அமெரிக்கா அதைப் பாதுகாப்பது முக்கியம் என்றார் அவர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இது ஒரு வரலாற்றுபூர்வ உடன்பாடு என்று குறிப்பிட்டார். “அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் இது மிகப் பெரிய வெற்றி,” என்றார் அவர்.
