வாஷிங்டன்: அமெரிக்கா 200,000 வெளிநாட்டினரின் விசாக்களை ரத்துச் செய்யத் திட்டமிடுகிறது.
அவர்கள், அமெரிக்காவில் வணிக, சுற்றுலா விசாவுக்காகவோ அகதி நிலை தரக் கோரியோ விண்ணப்பித்துள்ள அல்லது தற்போது விண்ணப்பம் செய்ய முயல்வோர். அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
அந்நிறுவனம் பெற்ற வெளியுறவுத்துறை ஆவணங்களையும் அமெரிக்க அதிகாரிகள் இருவரையும் மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அளவிலான விசா ரத்து நடவடிக்கையாக இது இருக்கும் என்று ஏபி குறிப்பிட்டது.
அமெரிக்கக் குடிநுழைவுக் கட்டமைப்பு ‘நீண்டகாலமாகவே அகதிகளின் அடிப்படையற்ற கோரிக்கைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் அந்நாட்டின் வெளியுறவுத் துணை அமைச்சர் கிறிஸ்டஃபர் லண்டாவ் குற்றம் சாட்டியிருந்தார்.
வெளியுறவு அமைச்சு இது குறித்து உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடுமையான குடிநுழைவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறார். உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதே அவற்றின் நோக்கம் என்று அவர் சொல்கிறார்.
இருப்பினும், பேச்சுரிமையையும் தகுந்த சட்ட வழிமுறைகளுக்கான உரிமைகளையும் அந்த நடவடிக்கை மீறுவதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. முக்கியமாக இன அடிப்படையிலான கெடுபிடிகள் குறித்துக் கவலை தெரிவித்த பூர்வகுடிச் சிறுபான்மையினருக்கு இது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவை குறிப்பிட்டன.


