குவைத் சிட்டி: மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள தங்கள் பங்காளி நாடுகளின் நலன்களை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ உறுதியளித்துள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துவரும் வேளையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மத்திய கிழக்குப் பூசலை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவர வகைசெய்யும் இறுதி ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
நிதியுதவிக் கோரிக்கை
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேட்டோ கூட்டமைப்புத் தலைவர் மார்க் ரட்டவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் திரு டிரம்ப் அவரிடம் கூறியிருக்கிறார்.
புதன்கிழமையன்று (ஜூன் 24) அவர் 88 பில்லியன் டாலர் (S$114.077 பில்லியன்) உதவித் தொகைக்கு ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் கோரினார். அத்தொகையில் பெரும்பங்கு ஈரான் போருக்கான செலவை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு ஈடுகட்டுவதற்கானது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மறுவுறுதியளிக்க திரு ரூபியோ அந்த வட்டாரத்துக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். மத்திய கிழக்குப் பூசலின்போது அவ்வட்டார நாடுகளும் ஈரான் பாய்ச்சிய ஏவுகணை, வானூர்தித் தாக்குதல்களுக்கு உள்ளாயின. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் அந்நாடுகளின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
வலிமை பெற்றுள்ள ஈரான்
போருக்குப் பிறகு ஈரான் மேலும் வலுப்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க அந்நாடு மறுத்து வருகிறது.
அத்துடன், அமெரிக்காவுடனான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அந்நாட்டின் தோல்வியை எடுத்துரைக்கும் ஒன்றாகவும் ஈரான் வகைப்படுத்துகிறது.
போரை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவர வகைசெய்யும் இறுதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா, ஈரானுடன் தீவிரமாகப் போராடிவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வட்டார நாடுகளின் அதே நிலைப்பாட்டைத்தான் அமெரிக்காவும் எடுப்பதாகத் திரு ரூபியோ குறிப்பிட்டார்.
“வளைகுடாப் பகுதியில் எங்கள் பங்காளிகளின் நிலைப்பாட்டைத்தான் நாங்களும் முழுமையாக எடுப்போம்,” என்றார் அவர். ஈரானுடனான பேச்சுவார்த்தை தொடர்பிலான எல்லா முடிவுகளுக்கும் அமெரிக்கா, வளைகுடாப் பங்காளிகளைத் தொடர்புகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீண்டகால உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட 60 நாள் பேச்சுவார்த்தை செயல்முறையை வகுத்திருந்த ஆரம்பகட்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம், ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் வட்டாரப் படைகள் குறித்த வளைகுடா நாடுகளின் நீண்டகாலக் கவலைகளைத் தீர்க்கத் தவறிவிட்டது.
ஆனால், “எங்கள் நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் குலைக்கும் எதையும் வாஷிங்டன் செய்யப் போவதில்லை,” என்று ரூபியோ வலியுறுத்தினார்.

