வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் வசூலிக்கப்பட்ட வரிகளில், ஏறத்தாழ 100 பில்லியன் அமெரிக்க டாலரை (S$128 பில்லியன்) அந்நாட்டு அரசாங்கம் இறக்குமதியாளர்களுக்குத் திருப்பி அளித்துள்ளதாக அமெரிக்க அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் தெரிவிக்கிறது.
முன்னதாக, எவ்வித சட்டபூர்வ முன்னனுமதியும் இன்றிப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின்மீது அதிபர் தன்னிச்சையாக வரி விதிக்க முடியாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 20ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அதிபர் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் செல்லாதவையாக்கப்பட்டன. அதன்படி, ரத்து செய்யப்பட்ட 166 பில்லியன் அமெரிக்க டாலர் வரியில் பாதியளவிற்கும் அதிகமான தொகை ஜூலை இறுதிவரை வட்டியுடன் சேர்த்துத் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவித் தொகையானது பயனீட்டாளரைச் சென்றடையாமல் இறக்குமதி நிறுவனங்களுக்கே சென்றடைவதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் மீண்டும் புதிய தற்காலிக வரிகளை அறிமுகப்படுத்தித் தமது வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறார்.


