ரஷ்யா, சீனாவை முந்திச் செல்ல மத்திய ஆசியாவின் உறவை நாடும் அமெரிக்கா

ரஷ்யா, சீனாவை முந்திச் செல்ல மத்திய ஆசியாவின் உறவை நாடும் அமெரிக்கா

படம்: ராய்ட்டர்ஸ்

18 Oct 2026 - 6:11 pm

2 mins read

வாஷிங்டன்: மத்திய, தெற்காசிய நாடுகளின் உறவைப் பலப்படுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ சனிக்கிழமை (அக்டோபர் 17) தமது ஆசியப் பயணத்தைத் தொடங்கினார்.

முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தானுக்கு 200 தொழிலதிபர்கள் அடங்கிய குழுவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திங்கட்கிழமை (அக்டோபர் 19) நடைபெறும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்பார்.

“இது ஒரு முக்கியமான உறவு,” என்று புறப்படுவதற்கு சற்று முன்பு ரூபியோ கூறினார்.

மேலும், இந்தப் பயணத்தை ஓர் உத்தி சார்ந்த பயணம் என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் பல நாடுகள் அங்கு உள்ளன,” என்றார்.

மத்திய ஆசியாவில், முக்கியமாக எரிசக்தித் துறையில் வலுவடைந்து வரும் பங்காளித்துவத்துக்கு வாஷிங்டனின் நல்லெண்ணத்தை ரூபியோ வெளிப்படுத்துவதாக வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வாஷிங்டனைச் சுற்றி பல முனைகளில் புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவும் சூழலில், ரஷ்யாவையும் சீனாவையும் முந்திச் செல்ல மத்திய, தெற்கு ஆசிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதில் அமெரிக்கா நாட்டம் காட்டுகிறது.

ஈரானுடனான போரில் அமெரிக்கா சிக்கியுள்ள நிலையிலும், உக்ரேன் மோதல் தணிவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையிலும் அமெரிக்க இடைப்பருவத் தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான கட்டத்தில், ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்கப் பயணத்தை முடித்த கையோடு ஆசிய நாடுகளுக்குப் பறந்துள்ளார் திரு ரூபியோ.

ஈரான், உக்ரேன் மற்றும் காசா தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டை அதிபர் டிரம்ப்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னரிடம் திரு ரூபியோ ஒப்படைத்துள்ளார்.

மத்திய ஆசியா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல பரந்த பரப்பளவு கொண்ட வளம் நிறைந்த ஒரு வட்டாரமாகும்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்வெளியுறவு அமைச்சர்