வாஷிங்டன்: அரேபியக் கடலில் இருந்த அமெரிக்கப் போர் விமானந்தாங்கிக் கப்பலை (ஆப்ரகாம் லிங்கன்) நெருங்கிய ஈரானிய ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 3) நிகழ்ந்தது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுவாயுதப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்வது குறித்து அரசதந்திரிகள் முயன்று வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாவிடில் விரும்பத்தகாத சூழ்நிலை எழக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானிய ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து, எண்ணெய் விலை (எதிர்கால விநியோகம்) பீப்பாய் ஒன்றுக்கு 1 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது.
ஈரானின் ஷஹீது-139 ரக ஆளில்லா வானூர்தி எந்த நோக்கத்துடன் அமெரிக்கப் போர் விமானந்தாங்கிக் கப்பலை நோக்கிச் செலுத்தப்பட்டது என்று தெரியவில்லை.
அதை அமெரிக்காவுக்குச் சொந்தமான எஃப்-35 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
இதுகுறித்து ஐநாவில் உள்ள ஈரானியப் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலகக் கடற்பகுதியில் தனது ஆளில்லா வானூர்தியுடனான தொடர்பை ஈரானிய ராணுவம் இழந்ததாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அதற்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை.
சம்பவத்தில் அமெரிக்க ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்காவுக்குச் சொந்தமான கருவிகள், இதர உடைமைகள் சேதமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

