ஈரானுடன் உடன்பாடு எட்ட அமெரிக்கா அவசரப்படாது: டிரம்ப்

ஈரானுடன் உடன்பாடு எட்ட அமெரிக்கா அவசரப்படாது: டிரம்ப்

2 mins read
af785d86-ec9b-4b4e-960d-fe53b2334a53
அமெரிக்காவும் ஈரானும் போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு, சரியான முறையில் உடன்பாட்டை எட்ட வேண்டும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: ஈரானுடன் எந்தவோர் உடன்பாட்டையும் அவசரப்பட்டு எட்ட வேண்டாம் என்று தம் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் இடையே உடனடியாக உடன்பாடு எட்டப்படலாம் என்று சனிக்கிழமை எழுந்த எதிர்பார்ப்புகளை டிரம்ப் நிர்வாகம் இப்போது குறைத்து மதிப்பிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியக் கப்பல்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை, “ஒரு சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, அது சான்றளிக்கப்பட்டு, இருதரப்பிலும் கையெழுத்தாகும் வரை முழு வீச்சில் தொடரும்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) பதிவிட்டார்.

“இருதரப்பும் போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு, சரியான முறையில் உடன்பாட்டை எட்ட வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஈரானிய அரசாங்கத்திடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை. எனினும், ஈரானின் புரட்சிகரக் காவல் படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், முடக்கப்பட்டுள்ள தங்களின் நிதி ஆதாரங்களை விடுவிக்க வேண்டும் என்ற ஈரானின் முக்கியக் கோரிக்கை உட்பட உடன்பாட்டின் சில அம்சங்களுக்கு அமெரிக்கா இன்னும் முட்டுக்கட்டை போட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமைதி உடன்பாட்டின் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் “பெரும்பாலும் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன” என்று திரு டிரம்ப் சனிக்கிழமை கூறியிருந்தார்.

இதற்கிடையே, ஈரானிய அரசாங்கத்தின் செயல்பாடுகள் போதிய வேகத்தில் இல்லாததால், எந்தவோர் உடன்பாடும் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என்று டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆயினும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் முக்கிய விவரங்களின் தற்போதைய நிலவரத்தை அவர் சுருக்கமாகக் கூறினார்.

தற்போது முன்மொழியப்பட்ட வரைவுத் திட்டத்தின்படி, இறுதி உடன்பாட்டை எட்டுவதற்குப் பேச்சுவார்த்தையாளர்களுக்கு 60 நாள் அவகாசம் வழங்கப்படும் என்று டிரம்ப் அரசாங்கத்தின் மற்றொரு மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்ஈரான்அமெரிக்காபோர்உடன்பாடு