அமெரிக்க, உக்ரேனியக் குழுக்கள் புளோரிடாவில் விரைவில் சந்திப்பு: வெள்ளை மாளிகை

2 mins read
979d8f51-d365-4729-84fe-c85cd9700c8a
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி - படம்: ஏஎஃப்பி மூலமாக கெட்டி இமேஜஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், உக்ரேனின் தேசியப் பாதுகாப்பு மன்றத் தலைவர் ரஸ்டம் உமெரோஃபைச் சந்திக்கவிருக்கிறார்.

அவர்களின் சந்திப்பு புளோரிடாவின் மயாமி நகரில் இடம்பெறும் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. திரு விட்கோஃப், ர‌‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் எதனையும் விட்டுக்கொடுக்கவில்லை என்பதை மாஸ்கோ பேச்சில் தெளிவுபடுத்தியதாகக் கிரெம்ளின் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்தப் பேச்சில் தமது மருமகன் ஜேரட் கு‌‌ஷ்னரும் கலந்துகொண்டதாகச் சொன்னார். பேச்சு, ஓரளவுக்கு நல்ல முறையில் நடைபெற்றதாக அவர் கூறினார். எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவிக்க வேண்டும், அதனால் என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்வது கடினம் என்றார் திரு டிரம்ப்.

உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபியா, ரத்தக்களறியை ர‌‌ஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார். உலகின் நேரத்தைத் திரு புட்டின் வீணாக்கிக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

இந்நிலையில், அமெரிக்க, உக்ரேனிய சமரசப் பேச்சாளர்கள் வரும் நாள்களில் புளோரிடாவில் சந்தித்துப் பேசுவர் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவர இப்போது உண்மையிலேயே நல்ல வாய்ப்பு இருப்பதை உலகம் நன்றாய் உணர்ந்திருப்பதாக அவர் சொன்னார். திரு ஸெலென்ஸ்கி, அந்தக் கருத்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். சமரசப் பேச்சுகளுக்கு இடையே ர‌‌ஷ்யாவுக்கு நெருக்குதல் அளிப்பதும் முக்கியம் என்றார் உக்ரேனிய அதிபர்.

குறிப்புச் சொற்கள்