தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் புனிதத் தலத்தை சேதப்படுத்திய அமெரிக்கர் கைது

2 mins read
9cb47414-7cf7-44a6-b2e6-66f848dd7836
கடந்த செப்டம்பர் மாதம், ஜப்பான் கிட்டத்தட்ட 27 மில்லியன் வருகையாளர்களை வரவேற்றது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் தோக்கியோவில் உள்ள புனிதத் தலம் ஒன்றைச் சேதப்படுத்திய அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டுச் சுற்றுப்பயணத் துறை வலுப்பெற்று வரும் நிலையில், அங்குச் சென்று தவறாக நடந்துகொள்ளும் வெளிநாட்டினரைச் சமாளிக்க ஜப்பான் எதிர்நோக்கும் சவால்களை அண்மைய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

கடந்த செப்டம்பரில் ஜப்பான் கிட்டத்தட்ட 27 மில்லியன் வருகையாளர்களை வரவேற்றது. வெளிநாட்டினரின் செலவுகளால், அந்நாட்டுப் பொருளியலுக்கு 5.86 டிரில்லியன் யென் (S$5.860 பில்லியன்) சேர்க்கப்பட்டது.

இருப்பினும், நாசவேலையில் ஈடுபடுவது, பொது இடத்தில் மது அருந்திவிட்டு பிரச்சினை செய்வது, பிரபல இடங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் போன்ற சம்பவங்கள், விதிமுறைகளை மீறுபவர்களையும் வெளிநாட்டினர் எண்ணிக்கையையும் சமாளிப்பதன் தொடர்பில் விவாதங்களை எழுப்பியுள்ளன.

இந்நிலையில், ‘மெய்ஜி ஜிங்கு’ புனிதத் தல நுழைவாயிலின் தூணில் கிறுக்கிய சந்தேகத்தின்பேரில் 65 வயது அமெரிக்கர் நவம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டதை தோக்கியோ காவல்துறை உறுதிப்படுத்தியது.

அந்தச் சதேகப் பேர்வழியும் அவரது குடும்பத்தாரும் ஜப்பானைச் சுற்றிப் பார்க்க நவம்பர் 11ஆம் தேதி அங்குச் சென்றடைந்ததாக ‘ஜிஜி’ செய்தி நிறுவனம் கூறியது.

அந்த நபர் தமது கைவிரல் நகங்களைப் பயன்படுத்தி, அந்தத் தூணில் தமது குடும்பப் பெயர்களைப் பிரதிநிதிக்கும் ஐந்து எழுத்துகளை எழுதியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பாதுகாப்புக் கண்காணிப்புக் கருவிகள் மூலம், காவல்துறையினர் அவரது ஹோட்டலில் அவரைக் கைதுசெய்ததாக செய்தி நிறுவனம் கூறியது.

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்த நபரைச் சந்தித்து தூதரக உதவியை அளித்து வருவதாகப் தூதரகப் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்