2,500 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த அமெரிக்க வங்கி

2,500 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த அமெரிக்க வங்கி

இந்த ஆட்குறைப்பு உத்திப்பூர்வமானது. ஏனெனில், மற்ற துறைகளில் மேலும் ஊழியர்களைப் பணியமர்த்த மோர்கன் ஸ்டான்லி திட்டமிட்டுள்ளது.
படம்: ராய்ட்டர்ஸ்

05 Mar 2026 - 10:00 am

2 mins read

பெங்களூரு: அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளின் ஒன்றான மோர்கன் ஸ்டான்லி, அதில் பணியாற்றும் தன் 3 விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக அறியப்படுகிறது.

ஆட்குறைப்பு குறித்த விவரங்களை அறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அதனை புதன்கிழமை (மாரச் 4) தெரிவித்துள்ளார்.

வங்கியின் மூன்று முக்கியப் பிரிவுகளான முதலீடு, வர்த்தகம், நிதி நிர்வாகம் ஆகிய துறைகளில் உள்ள ஏறத்தாழ 2,500 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி ஆலோசகர்கள் இந்த ஆட்குறைப்பில் உள்ளடங்கவில்லை எனவும் அடையாளம் தெரிவிக்க விரும்பாத அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

முதலீடு வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் மோர்கன் ஸ்டான்லி கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாறு காணாத அளவில் லாபம் அடைந்ததை வெளியிட்டது. கணிப்பாளர்களின் எதிர்பார்ப்பை மீறி, கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டின் லாபக் கணக்கு 47 விழுக்காடு என்று ஜனவரி மாதம் அது அறிவித்திருந்தது.

ஒப்பந்தங்கள் பெருகியதால் வங்கிகள் செய்த முதலீடும், கடன் வழங்கியதற்கான கட்டணங்கள் இரட்டிப்பாக உயர்ந்ததும் அதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு மரபு வழியாக நடக்கும் தொழில்நுட்பத்தை பாதிக்கும் என்ற அச்சமும், உலகளாவிய பதற்றத்தால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்கவும் முதலீடுகளை மாற்று வழிகளில் செய்ய வங்கியின் பல வாடிக்கையாளர்கள் தற்போது முற்படுகின்றனர்.

தனிப்பட்ட ஊழியர்களின் செயல்திறனைப் பொறுத்தே இந்த ஆட்குறைப்பு உத்திப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், மற்ற துறைகளில் மேலும் ஊழியர்களைப் பணியமர்த்த மோர்கன் ஸ்டான்லி வங்கி திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வங்கிஆட்குறைப்புஅமெரிக்காமுதலீடு