மாஸ்கோ: உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப், குஷ்னர் இருவரும் பலதரப்பட்ட யோசனைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் முன்வைத்துள்ளனர்.
அமெரிக்கத் தூதர்கள், உக்ரேனுக்கான முதல் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக சனிக்கிழமை (செப்டம்பர் 5) இரவு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் திரு விளாடிமிர் புட்டினுடன் பேச்சு நடத்தினர்.
அப்போது, உக்ரேன் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து பல யோசனைகளை அவர்கள் முன்மொழிந்ததாக ரஷ்யா தெரிவித்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மோசமான இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா புதுப்பித்திருக்கும் வேளையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வணிகப் பங்காளியான ஸ்டீவ் விட்காஃப்பும் திரு டிரம்ப்பின் மருமகன் குஷ்னரும் திரு புட்டினை மூன்று மணி நேரத்திற்கும் மேலாகச் சந்தித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்தது.
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கியத் திட்டங்கள் பற்றி தூதர்கள் விவாதித்ததாகவும் அவை வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை பின்னர் தெரிவித்தது.
உக்ரேனிலும் இதேபோன்ற பயனுள்ள சந்திப்புகளைத் தூதர்கள் எதிர்பார்ப்பதாகவும் அது குறிப்பிட்டது.
பல்லாயிரம் பேர் கொல்லப்படுவதற்கும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுவதற்கும் இந்தப் போர் காரணமாக அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் போர் தீவிரமடைந்ததால் அமெரிக்கத் தூதர்கள் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டனர்.
மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பின் இயக்குநர் கடந்த மாதம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இவ்வாரத் தொடக்கத்தில் வட கரோலினாவில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் ரஷ்ய நிதி அமைச்சரை அமெரிக்கா வரவேற்றது.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் உக்ரேனின் நிலைமை கடினமாக இருப்பதாக அமெரிக்கத் தூதர்களிடம் திரு புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
கிரெம்ளின் உதவியாளரான யூரி உஷாகோவ் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் திறந்த மனத்துடன் நடந்ததாகக் கூறினார்.
“அமெரிக்கத் தூதர்கள் ஒரு தீர்வை எட்டக்கூடிய சாத்தியமான வழிகள் குறித்து பல கருத்துகளை முன்வைத்தனர்,” என்றார் அவர்.
ஆனால் அது குறித்த விரிவான விவரங்களை வெளியிடவில்லை.
கிழக்கு உக்ரேனில் எஞ்சியப் பகுதிகளைக் கைப்பற்றுவது என்ற தங்களது ராணுவ இலக்குகளை நிறைவேற்றுவதில் மாஸ்கோ நம்பிக்கையுடன் இருப்பதாக அமெரிக்கர்களிடம் ரஷ்யத் தரப்பு கூறியதாகவும் உஷாகோவ் மேலும் தெரிவித்தார்.
மாஸ்கோவிற்கு குஷ்னரும் விட்காஃப்பும் மேற்கொள்ளும் எட்டாவது பயணம் இது.
முந்தைய சந்திப்புகளைப் போலவே, புட்டினுடன் அவரது வெளியுறவுக் கொள்கை உதவியாளர் உஷாகோவ், முதலீட்டுத் தூதர் கிரில் டிமிட்ரீவ் இருவரும் உடனிருந்தனர். அவர்கள், இரு தூதர்களையும் விமான நிலையத்தில் சந்தித்து, உணவகத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் கிரெம்ளினுக்கு அழைத்துச் சென்றனர்.
மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான தொடர்புகள் எப்போதும் நன்மை பயக்கும் என்றும் அவர்களுடன் பணியாற்றுவது ரஷ்யாவிற்கு வசதியாக இருக்கிறது என்றும் விட்காஃப், குஷ்னரிடம் திரு புட்டின் கூறினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது நல்வாழ்த்துகளை புட்டினுக்குத் தெரிவித்துள்ளதாகவும் பிரதிநிதிகள் குழுவின் பயணத்தின்போது போர்நிறுத்தத்தை அறிவித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் விட்காஃப் கூறினார்.


