அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 16 வயதுச் சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று குழந்தைகளும் ஓர் ஆசிரியரும் உயிரிழந்தனர்.
அந்தச் சிறுவனை அருகிலிருந்த ஒருவர் சுட்டுக்கொன்றதாகக் காவல்துறை கூறியது.
ஓரிகானின் பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரயில் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (அக்டோபர் 15) பிற்பகலில் அந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.
கொல்லப்பட்ட மூன்று குழந்தைகளும் ஐந்து, எட்டு மற்றும் 11 வயதுடையவர்கள். மேலும், ஏழு வயதுச் சிறுவனும் 54 வயது ஆசிரியரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.
தாக்குதல் நடத்திய சிறுவனுக்குப் பள்ளியுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
தாக்குதல் நடத்தியவர் 16 வயதுடைய உள்ளூர் சிறுவன் என்று கூறிய காவல்துறை, அவரைப் பற்றியோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் பற்றியோ கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:59 மணிக்கு, சில்வர் ரயில் தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று பெண்ட் காவல் துறையின் பேச்சாளர் ஷெய்லா மில்லர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
பூட்டப்பட்டிருந்த கதவுகளை துப்பாக்கியால் சுட்டு, வலுக்கட்டாயமாக சிறுவன் பள்ளிக்குள் நுழைந்ததாக பெண்ட் நகரக் காவல் துறைத் தலைவர் மைக் கிராண்ட்ஸ் தெரிவித்தார். அந்தச் சிறுவன் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதை அறிந்த நபர் ஒருவர், பின்தொடர்ந்து சென்று அவனைச் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.
சம்பவ இடத்திலிருந்து வெளியிடப்பட்ட புகைப்படங்களில் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட சிவப்பு நிற வாகனம் ஒன்று காணப்பட்டது.
சம்பவத்திற்குப் பின்னர் அந்தப் பள்ளிக்கூடம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) மூடப்பட்டது. கிட்டத்தட்ட 450 பிள்ளைகள் படிக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் 40 பணியாளர்கள் இருந்தனர்.
கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் 235 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை இதுவரை 140 ஆக உள்ளது.
