வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பொம்மை இறக்குமதி நிறுவனம் ஒன்று, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி அந்நாடு முழுவதிலும் உள்ள கடைகளிலிருந்து கிட்டத்தட்ட 37,000 ‘ஸ்குவிஷி’ பொம்மைகளைத் திரும்பப் பெற்றுவருகிறது.
அமெரிக்கப் பயனீட்டுப் பொருள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்குவிஷி டம்பளிங்', 'கிரேஸி ஸ்குவிப் பால்' ஆகிய இருவகை பொம்மைகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த பொம்மைகளை, கலிஃபோர்னியாவின் வெர்னான் நகரைத் தளமாகக் கொண்ட ஏபிசி டிரேடிங் நிறுவனம் இறக்குமதி செய்தது.
அந்த பொம்மைகளுக்குள் இருக்கும் 'வாட்டர் பீட்ஸ்' எனப்படும் தண்ணீர் மணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பெரிதாக விரியக்கூடும் என்பதால், அமெரிக்காவின் பொருள் பாதுகாப்புத் தரநிலையை அவை மீறியுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
மேலும், “பிள்ளைகள் அந்தத் தண்ணீர் மணிகளை விழுங்கினால், மூச்சுத்திணறல், குடல் அடைப்பு போன்ற ஆபத்துகள் ஏற்படுக்கூடும். இதனால் வாந்தி, நீரிழப்பு ஆகியவை ஏற்படுவதுடன் பிள்ளைகளின் உயிருக்கும்கூட ஆபத்து ஏற்படலாம்,” என அது எச்சரித்துள்ளது.
அவ்விரு பொம்மைகளும் பல்வேறு வண்ணங்களில் மின்னும் துகள்களுடனும் தண்ணீர் மணிகளுடனும் வருகின்றன.
சிங்கப்பூரிலும் கடந்த ஓராண்டில் ‘ஸ்குவிஷி’ பொம்மைகளுக்கு என்றே தனித்துவமாகப் பல கடைகள் தோன்றியதைத் தொடர்ந்து அம்பொம்மைகள் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இணையத்தில் இந்த வகை பொம்மைகளை விற்பனை செய்யும் காணொளிகள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. மேலும் சில பிரபல நிறுவனங்கள் சன்டெக் சிட்டி, சைனாடவுன் போன்ற இடங்களில் நேரடிக் கடைகளையும் திறந்துள்ளன.
சிங்கப்பூரின் பயனீட்டுப் பொருள் பாதுகாப்பு அலுவலகம், நம்பகமான நிறுவனம், விற்பனையாளர்களிடமிருந்து ‘ஸ்குவிஷி’ பொம்மைகளை வாங்குமாறும் துர்நாற்றம் வீசும் பொம்மைகளைத் தவிர்க்குமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
