வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் நடைபெறவிருந்த அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பு, கடுமையான வெப்பம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் நீடித்து வரும் மிகக் கடுமையான வெப்பத்தின் தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அண்மைய நிகழ்ச்சி இதுவாகும்.
அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு நிலையம் வாஷிங்டனுக்குக் கடுமையான வெப்ப அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது என்றும் அங்கு வெப்பக் குறியீட்டின் அளவு 43 டிகிரி செல்சியஸ் முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்றும் ஜூலை 3ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கச் சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த அணிவகுப்பு சனிக்கிழமை (ஜூலை 4) சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் நடைபெறவிருந்தது.
எங்கள் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கவனமான பரிசீலனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபத்தான வெப்ப அலை, பல அமெரிக்க நகரங்களில் வெப்பநிலையை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் (மூன்று இலக்கங்கள்) தாண்டச் செய்துள்ளது.

