கமலா அதிபராக வேண்டும் என விழையும் அமெரிக்க இந்தியச் சமூகம்

2 mins read
22e4f1c3-4180-4a46-b1cd-3b6a9a93a698
பென்சில்வேனியாவில் வீடு வீடாக சென்று கமலா ஹாரிசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யும் திரு கிஷன் புட்டா. - படம்: திரு கிஷன் புட்டா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அதிபராக வேண்டும் என்று அங்கு வாழும் இந்தியர்கள் விழைவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் இந்தியர்கள் உள்ளனர். சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தாலும் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் மாநில அவைகளிலும் அவர்களது பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய ரத்தமுள்ள கமலா ஹாரிசை ஆட்சிப் பீடத்தில் அமரவைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

60 வயது கமலா ஹாரிசின் தாயார் ஓர் இந்தியர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

கமலாவின் தாயார் 1958ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவை அடைந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அமெரிக்க இந்தியச் சமூகத்தின் ஆதரவு அவருக்குக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்க இந்தியச் சமூகத்தினரிடையே அவருக்கான ஆதரவு பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது.

“கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கு முன்பு அமெரிக்க அரசியலில் ஈடுபடும் தெற்காசியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அரசியலில் இந்தியச் சமூகம் ஈடுபட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எந்த ஓர் அமைப்போ உள்கட்டமைப்போ இருந்ததில்லை,” என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 50 வயது அமெரிக்க இந்தியரான திரு கிஷன் புட்டா தெரிவித்தார்.

இம்முறை பிரசாரக்கூட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் அமெரிக்க இந்தியர்கள் அதிகம் இருப்பதை அவர் சுட்டினார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனின் ஜார்ஜ்டவுன் பகுதியின் ஆணையராக மீண்டும் பதவி வகிக்கும் இலக்குடன் அவர் அதற்கான தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.

நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஏறத்தாழ 2.6 மில்லியன் அமெரிக்க இந்தியர்கள் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்